×

ஆர்டிஓ வாகனத்தை கிராம மக்கள் முற்றுகை ஒடுகத்தூர் அருகே பரபரப்பு கல்குவாரி திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து

ஒடுகத்தூர், ஜன.23: ஒடுகத்தூர் அடுத்த கரடிகுடி ஊராட்சிக்கு உட்பட்ட தாங்கல் என்ற பகுதியில் அரசுக்கு சொந்தமாக 2 கல்குவாரிகளும், தனியாருக்கு சொந்தமாக 4 குவாரிகள் என மொத்தம் 6 கல்குவாரிகள் இயங்கி வந்தது.
இந்நிலையில் கல்குவாரியின் ஒப்பந்தம் முடிந்து விட்டதால் கடந்த சில ஆண்டுகளாக கல்குவாரி செயல்படாமல் இருந்து வந்தது. இந்நிலையில், அரசு சார்பில் மீண்டும் கல்குவாரி தொடங்க புவியியல், சுரங்கத்துறை மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மூலம் சுற்றுச்சூழல் தாக்கம் மதிப்பீடு செய்யப்பட்டது. இது தொடர்பாக கலெக்டர் சுப்புலட்சுமி உத்தரவின் பேரில் நேற்று கரடிகுடி பகுதியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடந்தது. இதற்கிடையே, அரசு அதிகாரிகள் வருவதற்கு முன்பாக கரடிகுடி ஊராட்சிக்கு உட்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கல்குவாரி திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன போஸ்டர்களை கையில் ஏந்தி கொண்டு கோஷமிட்டனர். அப்போது, கூட்டத்திற்கு வருகை புரிந்த ஆர்டிஓ செந்தில்குமாரின் வாகனத்தை சாலையிலேயே வழிமறித்து முற்றுகையிட்டு தங்களின் கோரிக்கையை வலியுறுத்தினர்.பின்னர், அனைவரையும் திருமண மண்டபத்திற்குள் அழைத்து சென்று கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது.

இதில் டிஆர்ஓ சிவசுப்பிரமணியம், ஆர்டிஓ செந்தில்குமார், புவியியல் மற்றும் சுரங்கத் துறை அலுவலர் சுந்தர வள்ளி ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது, கூட்டம் தொடங்கியதும் கல்குவாரி வேண்டும் என்று ஒரு தரப்பும், கல்குவாரி வேண்டாம் என்று மற்றொரு தரப்பும் மாறி மாறி அதிகாரிகளிடம் கருத்து கூறினர். அப்போது, இரு தரப்புக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு அங்கு பரபரப்பு நிலவியது. பின்னர் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த வேப்பங்குப்பம் இன்ஸ்பெக்டர் முத்துச்செல்வன் தலைமையிலான போலீசார் இருதரப்பையும் சமரசம் செய்தனர். தொடர்ந்து நடந்த கூட்டத்தில் கல்குவாரி திறந்தால் அங்கு ஏற்படும் வெடி சத்தத்தின் அதிர்வால் வீடுகளில் விரிசல் ஏற்படுகிறது. நிலத்தடி நீர் குறைந்து விடுகிறது. காற்று கடுமையாக மாசுபடுகிறது என்று ஒரு தரப்பு மக்கள் தங்களின் கோரிக்கை முன் வைத்து பேசினர்.

அதேபோல், மற்றொரு தரப்பினர் கல்குவாரி திறந்தால் வேலை வாய்ப்பு கிடைக்கும். தற்போது உள்ள தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அதிக சத்தம் இல்லாமலும், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாமலும் குவாரியை நடத்த அனுமதி வழங்க வேண்டும் என்று கூறினர். இந்த நிலையில் கருத்து கேட்பு கூட்டத்தில் தொடர்ந்து வாக்குவாதம் ஏற்பட்டதால் பொதுமக்கள் தங்களின் கருத்துகளை மனுவாக அளிக்கலாம் என்று அதிகாரிகள் கூறினர். அதன்படி, இருதரப்பு பொதுமக்களும் தங்களின் கருத்துக்கள் அடங்கிய மனுக்களை அதிகாரிகளிடம் வழங்கினர்‌. தொடர்ந்து கடந்த 2 ஆண்டுகளாக இந்த கருத்து கேட்பு கூட்டம் நடந்து வருகிறது. இந்த ஆண்டு 3வது கருத்து கேட்பு கூட்டம். ஆனால் இந்த கூட்டத்தில் உடன்பாடு ஏற்படாததால் எந்த ஒரு அறிவிப்பும் இல்லாமல் அரசு அதிகாரிகள் கூட்டத்தை முடித்து கொண்டு அங்கிருந்து சென்றனர்.

Tags : Odugathur ,Thangal ,Karadigudi ,
× RELATED 2ம் நிலை காவலர்களுக்கான உடற்தகுதி...