பாக்தாத்: சிரியாவில் உள்ள சிறைகளில் இருந்து 150 ஐஎஸ் தீவிரவாதிகளை ஈராக் நாட்டிற்கு மாற்றும் நடவடிக்கையை அமெரிக்க ராணுவம் தொடங்கியுள்ளது. சிரியாவில் குர்திஷ் தலைமையிலான படைகளின் வீழ்ச்சியைத் தொடர்ந்து, வடகிழக்கு பகுதிகள் சிரியா அரசின் கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளன. இந்தச் சூழலைப் பயன்படுத்தி அங்குள்ள சிறைகளில் இருந்து தீவிரவாதிகள் தப்பிச் செல்லும் அபாயம் ஏற்பட்டது. ஏற்கனவே ஷத்தாடி சிறையில் இருந்து சிலர் தப்பியதாகத் தகவல்கள் வெளியாகின. இதனால் பாதுகாப்பு கருதி சிறைக்கைதிகளை வேறு பாதுகாப்பான இடத்திற்கு மாற்ற வேண்டிய கட்டாயம் அமெரிக்காவுக்கு ஏற்பட்டது.
இந்நிலையில் நேற்று முதற்கட்டமாக 150 ஐஎஸ் தீவிரவாதிகளை ஈராக் சிறைகளுக்கு அமெரிக்க ராணுவம் அதிரடியாக மாற்றியது. இது குறித்துப் பேசிய அமெரிக்க தளபதி அட்மிரல் பிராட் கூப்பர், ‘ஐஎஸ் அமைப்பைத் தோற்கடிக்கவும், பாதுகாப்பை உறுதி செய்யவும் ஈராக் அரசுடன் இணைந்து செயல்படுகிறோம்’ என்று தெரிவித்தார். மாற்றப்பட்டவர்களில் துனிசியா, தஜிகிஸ்தான் மற்றும் கஜகஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஆபத்தான தலைவர்கள் உள்ளனர். மொத்தம் 7000 கைதிகளை ஈராக்கிற்கு மாற்றத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு ஈராக் எம்.பி மிக்தாத் அல்-கபாஜி எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், சிரியா அரசு இந்த நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.
