லாகூர்: பாக். முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் பேரன் திருமணத்தில் நடந்த அதிக செலவு கடும் விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது. பாக். முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் பேரனும், பஞ்சாப் மாகாண முதல்வர் மரியம் நவாசின் மகனுமான ஜூனைத் சப்தாருக்கும் மூத்த அரசியல்வாதி ஷேக் ரோஹீல் அஸ்கரின் பேத்தி ஷான்சாய் அலி ரோஹைலினுக்கும் கடந்த 17 மற்றும் 18ஆம் தேதிகளில் லாகூரில் ஆடம்பர திருமணம் நடந்தது.
இந்த விழாவில் நவாஸ் ஷெரீப்பின் மகன் ஹசன் நவாஸ் ஷெரீப், தனது சகோதரர் ஹுசைன் நவாஸுடன் கலந்து கொண்டார். ஆனால் ஹசனின் மணிக்கட்டில் ஒரு குறிப்பிட்ட ஆடம்பர வாட்ச் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது. சமூக ஊடக பயனர்கள் கடிகாரத்தை பிராங்க் முல்லர் வான்கார்டு ரெவல்யூஷன் 3 ஸ்கெலட்டன் என்று அடையாளம் கண்டனர்.
இது மிகவும் அரிதான, சொகுசு வாட்ச் ஆகும். தி வாட்ச் பேஜஸில் உள்ள பட்டியல்களின்படி, இந்த மாடலின் வழிகாட்டி விலை 685,157 டாலர் ஆகும், இது தோராயமாக ரூ.6,26,92,927 ஆகும். பாகிஸ்தான் நாணயத்தில் இதன் விலை கிட்டத்தட்ட 20 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. இதை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்த பயனர்கள் நமது வரிப்பணம் எங்கே போகிறது என்று கேள்வி எழுப்பினர்.
பணவீக்கம், வேலையின்மை, தொடர்ச்சியான பொருளாதார நெருக்கடிகளால் பாதிக்கப்பட்ட ஒரு நாட்டில் ஒரு அரசியல் குடும்பம் செல்வத்தை வெளிப்படையாகக் காட்டியதாக அவர்கள் கண்டனம் தெரிவித்தனர். மேலும் மணமகள் ஷான்சாய் அலி ரோஹைலின் வைத்திருந்த கைப்பை வாலண்டினோ கரவானி என்று அடையாளம் கண்டனர். இதன் விலை 3,100டாலர், அதாவது தோராயமாக ரூ.3 லட்சம் அல்லது பாகிஸ்தான் நாணயத்தில் 8 லட்சம். இதுவும் விமர்சனம் செய்யப்பட்டது. மேலும் திருமண விழாவில் பங்கேற்றவர்கள் அணிந்த ஆடைகளும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
