×

ஜெயலலிதா மீதான வருமான வரி பாக்கி விவகாரம் 2 வாரங்களில் பதில்தர வேண்டும்: வருமான வரித்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை, ஜன.22: ஜெயலலிதா மீதான வருமான வரி வழக்கில் 2 வாரங்களில் பதில் தருமாறு வருமான வரித்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிரான வருமான வரி வழக்கில் 13 கோடி ரூபாயை செலுத்துமாறு அவரது சட்டப்பூர்வ வாரிசாக அறிவிக்கப்பட்டுள்ள தீபாவுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியது. இந்த நோட்டீசை எதிர்த்து தீபா தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மற்றொரு வாரிசான தீபக்கும் வழக்கில் சேர்க்கப்பட்டார்.

வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, தீபா தரப்பில், வருமான வரி பாக்கி முதலில் 36 கோடி ரூபாய் என்றும், பின்னர் 13 கோடி ரூபாய் செலுத்த வேண்டும் என்றும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. சரியான தொகையை தெரிவித்தால் செலுத்த தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, வரி பாக்கி குறித்து பதில் மனு தாக்கல் செய்யுமாறு வருமான வரித்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி சி.சரவணன் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, வரிபாக்கி குறித்து பதில்மனு தாக்கல் செய்ய வருமான வரித்துறைக்கு உத்தரவிடப்பட்டிருந்தும் பதில் மனு தாக்கல் செய்யப்படவில்லை என்று தீபா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, வரி பாக்கி தொடர்பாக 2 வாரங்களில் பதில்மனு தாக்கல் செய்யுமாறு வருமான வரித்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

Tags : Jayalalithaa ,Income Tax Department ,Chennai ,Madras High Court ,Chief Minister ,
× RELATED அதிகரிக்கும் வெப்பத்தால் பகலில்...