×

விரட்டி,விரட்டி பணம் பறிமுதல்; தேர்தல் ஆணையம் கெடுபிடி: பணத்தை இழந்தவர்கள் பரிதவிப்பு

 

கோவை: சோதனை என்ற பெயரில் விரட்டி விரட்டி பணம் பறிமுதல் செய்யும் தேர்தல் ஆணையத்தின் கெடுபிடியால் தொழில் செய்பவர்கள், வியாபாரிகள் பணத்தை கொடுத்து விட்டு பரிதவித்து வருகின்றனர். தேர்தல் நடத்தை விதிகள் செயல்பாட்டுக்கு வந்துவிட்ட நிலையில் 50 ஆயிரம் ரூபாய்க்கு குறைவாக மட்டுமே பணம் எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்படும். அதற்கு மேல் பணம் வைத்திருந்தால் ஆதாரம் காட்ட வேண்டும். தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த பின்னர் 10 ஆயிரம் ரூபாய்க்கு அதிகமான மதிப்புள்ள பொருட்களையும் பரிசு என கருதி தேர்தல் பிரிவினர் பறிமுதல் செய்து வருகின்றனர்.

தேர்தல் பிரிவினர், தொழில் வர்த்தகம் தொடர்பான பணம், பொருட்கள் பரிவர்த்தனை தொடர்பான ஆதாரங்களை காட்டிலும் எங்கே எப்போது பணம் பெறப்பட்டு, எப்போது பொருள் வாங்கப்பட்டது என கேட்டு பறிமுதல் செய்து வருகின்றனர். இதனால் குழப்பமான நிலைமை இருக்கிறது.
கோவை மாவட்டத்தில் மட்டும் கடந்த 2 நாளில், 30 லட்ச ரூபாய்க்கு அதிகமான தொகை, குண்டா, பாத்திரம் உள்ளிட்ட பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. சாக்லெட் வியாபாரியிடம் 6.50 லட்ச ரூபாய், பிஸ்கட் வியாபாரியிடம் 85 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

பணம் பறிமுதல் செய்யப்பட்ட பின்னர், பறிமுதல் செய்த அலுவலர்களிடம் தொகைக்கான ஆதாரங்களை காட்டி அதை திரும்ப பெற நேற்று சிலர் கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தின் கணக்கு பிரிவில் குவிந்தனர். இது தொடர்பாக புகார்தாரர்கள் கூறுகையில், ‘‘பொருட்களை கொடுத்து பணம் வாங்கி வருகிறோம். பொருட்கள் விற்பனைக்கு ஜிஎஸ்டி இருக்கிறது. அதை காட்டுகிறோம். வணிக, வர்த்தக விவரங்களை காட்டுகிறோம். ஒரு இடத்திற்கு கலெக்‌ஷன் பணிக்கு போய் தொகை வாங்கி வருகிறோம்.

அந்த பணத்தை பறிமுதல் செய்து விடுகிறார்கள். நாங்கள் விற்ற பொருட்கள், அதற்கு வாங்கிய தொகை என ஆதாரம் காட்டினாலும் இது அந்த தொகை தானா என தேர்தல் பிரிவினர் சந்தேகம் தெரிவிக்கிறார்கள். மேலும் பணத்தை பறிமுதல் செய்தால் தேர்தல் பிரிவில் பாராட்டு கிடைக்கும் என்பது போல் கருதி பணி செய்கிறார்கள். இதனால் எங்களுக்கு தான் அலைச்சல். நாங்கள் பணத்திற்கான ஆதாரங்களை கணக்கு பிரிவில் காட்டி, தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்திற்கு சென்று அங்கே விண்ணப்பித்து ஆதாரங்களை காட்டி, கடைசியாக கருவூலம் சென்று அங்கே ஆதாரம் காட்டி பெற வேண்டியிருக்கிறது.

பல நாட்கள் நடையாய் நடந்தால் தான் தொகையை மீட்க முடியும். இல்லாவிட்டால் அரசு கணக்கில் சேர்த்து விடுவோம் என்கிறார்கள். ஆதாரங்களை அலுவலர்கள் சிலர் முறையாக ஏற்பதில்லை. ஆதாரம் இருந்தாலும் சந்தேகம் என பறிமுதல் செய்கிறார்கள்’’ என்றனர். இதுகுறித்து தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா கூறுகையில், ‘‘வியாபாரிகளை விரட்டி விரட்டி பணத்தை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகின்றனர். நாங்கள் அரசியல் கட்சியை சார்ந்தவர்கள் அல்ல. ஓட்டுக்கு பணம் கொடுப்பவர்கள் அல்ல. வியாபாரத்துக்கு பணம் எடுத்து செல்லக்கூடியவர்களை மடக்கி பிடித்து வீடியோ எடுத்து துன்புறுத்தி வருகின்றனர்.

இதுகுறித்து தேர்தல் அதிகாரியிடம் மனு கொடுத்துள்ளோம்’’ என்றார். நாங்கள் விற்ற பொருட்கள், அதற்கு வாங்கிய தொகை என ஆதாரம் காட்டினாலும் இது அந்த தொகை தானா என தேர்தல் பிரிவினர் சந்தேகம் தெரிவிக்கிறார்கள். பல நாட்கள் நடையாய் நடந்தால் தான் தொகையை மீட்க முடியும். இல்லாவிட்டால் அரசு கணக்கில் சேர்த்து விடுவோம் என்கிறார்கள்.

Tags : Election Commission ,Coimbatore ,
× RELATED அதிகரிக்கும் வெப்பத்தால் பகலில்...