இடைப்பாடி, ஜன.22: இடைப்பாடி அருகே நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான நிலத்தை அளக்க எதிர்ப்பு தெரிவித்து, பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இடைப்பாடி நகராட்சி, ஆவணியூர்கோட்டை பகுதியில் முஸ்லீம்கள் தொழுகை நடத்தும் தர்காவும், இந்துக்கள் வணங்கும் பெருமாள் கோயில் மற்றும் மாரியம்மன் கோயில்கள் உள்ளது. இப்பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் மாரியம்மன் கோயிலும் உள்ளது. இதனையொட்டி உள்ள 35 சென்ட் புறம்போக்கு நிலத்தை யார் பயன்படுத்துவது என இந்து-முஸ்லீம் தரப்பினரிடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், சாலையோரமுள்ள நெடுஞ்சாலைத்துறையினரின் நிலத்தை அளவீடு செய்ய வேண்டும் என இடைப்பாடி நெடுஞ்சாலைத்துறை உதவி செயற்பொறியாளர் குபேரந்திரன் வருவாய்த்துறையினரிடம் மனு அளித்தார்.
அதன் பேரில், நேற்று இடைப்பாடி தாசில்தார் வைத்தியலிங்கம், தாலுகா அலுவலக தலைமை சர்வேயர் சுந்தரம், சர்வேயர் சங்கீதா ஆகியோர் ஆவணியூர் கோட்டை பகுதியில் உள்ள நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான நிலத்தை அளவீடு செய்தனர். அப்போது அங்கு கூடியிருந்த முஸ்லீம் பெண்கள், சர்வேயர் சங்கீதா ஒரு தலைபட்சமாக நடந்து கொள்வதாக கூறி, 20க்கும் மேற்பட்டவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இடைப்பாடி இன்ஸ்பெக்டர் பேபி தலைமையிலான போலீசார், மறியலில் ஈடுபட்ட பெண்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றினர். அவர்களிடம், இடைப்பாடி தாசில்தார் வைத்தியலிங்கம், நகரமன்ற தலைவர் பாஷா ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்களது நிலத்திற்கு எந்த பாதிப்பு வராத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து, நெடுஞ்சாலைத்துறை நிலம் அளவீடு செய்யப்பட்டது.
