×

பிரதமர் மோடி தமிழகம் வருகை; நாளைக்குள் கூட்டணியை இறுதி செய்ய பாஜ தீவிரம்: பல்வேறு கட்சிகளை சந்திக்க பியூஷ் கோயல் திட்டம்

 

சென்னை: பிரதமர் மோடியின் தமிழகம் வருகையை முன்னிட்டு, நாளைக்குள் கூட்டணியை இறுதி செய்ய பாஜ தீவிரம் காட்டி வருகிறது. மேலும் கூட்டணியில் பல்வேறு கட்சிகளை இணைக்கும் வகையில் அக்கட்சிகளின் தலைவர்களை சந்தித்து பேச பியூஷ் கோயல் திட்டமிட்டுள்ளார். தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தமிழக அரசியல் கட்சிகள் தீவிர அரசியல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. திமுக கூட்டணியில் எந்த வித மாற்றமும் இல்லாமல் ஒற்றுமையாக நீடிப்பதால் இக்கூட்டணி வலுவாக இருக்கிறது. அதேநேரம் அதிமுக-பாஜ கூட்டணியில் யாரும் இணையாத நிலையில், பாஜ தலைமை கூட்டணி விஷயத்தில் கடுமை காட்ட தொடங்கியுள்ளது. தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமையும் என்று மேடைக்கு மேடை அமித்ஷா வெளிப்படையாக பேசி வரும் நிலையில், எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அதிமுக மூத்த தலைவர்கள் அதை கடுமையாக எதிர்த்து வருகின்றனர். இதனால் அதிமுக கூட்டணிக்குள் தொடர்ந்து குழப்பம் நீடித்து வந்தது. இந்த சூழ்நிலையில், அமித்ஷாவின் அழுத்தம் காரணமாக பாமக அன்புமணி தரப்பு இக்கூட்டணியில் இணைந்தது. இதை தொடர்ந்து அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரனை கூட்டணிக்குள் கொண்டு வருவதற்காக அவருடன் அமித்ஷா உள்ளிட்ட பாஜ தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார். அவர் இன்று காலை ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல் முன்னிலையில் அதிமுக-பாஜ கூட்டணியில் இணைந்தார்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், பிரதமர் மோடி நாளை மறுநாள் தமிழகம் வருகிறார். சட்டசபை தேர்தலை முன்னிட்டு, தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில் வரும் 23ம்தேதி (வெள்ளிக்கிழமை) மிகப்பெரிய அளவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்ற உள்ளார். பிரதமர் மோடி வருகையால் மீனம்பாக்கம் மற்றும் கிண்டி ஆகிய பகுதிகள் சிவப்பு மண்டலம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மோடி பங்கேற்கும் இந்த பொதுக்கூட்டத்தில் கூட்டணி கட்சி தலைவர்களை மேடை ஏற்றிவிட வேண்டும் என்பதில் பாஜ தலைமை தீவிரம் காட்டி வருகிறது. எனவே, நாளைக்குள் கூட்டணியை இறுதி செய்ய பாஜ தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறது. இதற்காக பியூஷ் கோயல் இன்னும் 3 நாட்கள் சென்னையில் தங்க உள்ளார். இக்கூட்டணியில், மேலும் சில கட்சிகளை இணைக்கும் வகையில் அவர் பல்வேறு கட்சி தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு, வேகமாக கூட்டணியை இறுதிச் செய்ய வேண்டும் என்றும் பாஜ தலைமையும், அமித்ஷாவும், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நெருக்கடி கொடுப்பதாக சொல்லப்படுகிறது.

 

Tags : Modi ,Tamil Nadu ,BJP ,Piyush Goyal ,Chennai ,Tamil Nadu Assembly… ,
× RELATED சென்னையில் மார்ச் மாதத்திற்குள் 20...