புதுடெல்லி: தெருநாய் விவகாரத்தில் நீதிமன்றத்தை விமர்சித்த முன்னாள் ஒன்றிய அமைச்சருக்கு நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். நாட்டில் தெருநாய்கள் கடியில் இருந்து பொதுமக்களை காக்க நடவடிக்கை எடுக்க கோரி தொடரப்பட்ட வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த விவகாரத்தில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை முன்னாள் ஒன்றிய அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான மேனகா காந்தி பொதுவெளியிலும், சமூக வலைதளங்களிலும் தொடர்ந்து விமர்சித்து வந்தார். அவரது உடல்மொழியும், பேசும் தொனியும் நீதித்துறையை அவமதிக்கும் வகையில் இருந்ததாக நீதிபதிகள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
நாய் கடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவது மற்றும் நாய் வளர்ப்பவர்களை பொறுப்பேற்கச் செய்வது குறித்து நீதிமன்றம் கூறிய கருத்துக்களை அவர் கிண்டல் செய்ததற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா மற்றும் என்.வி.அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மேனகா காந்தி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராஜு ராமச்சந்திரன், ‘நான் மும்பை தாக்குதல் தீவிரவாதி அஜ்மல் கசாப்பிற்காக கூட வாதாடியவன்’ என்று குறிப்பிட்டார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக நீதிபதிகள், ‘அஜ்மல் கசாப் கூட நீதிமன்றத்தை அவமதித்து பேசவில்லை, ஆனால் உங்கள் கட்சிக்காரர் (மேனகா காந்தி) அதை செய்துள்ளார்’ என்று காரசாரமாக கூறினர்.
மேலும் நீதிபதிகள் கூறுகையில், ‘எங்களின் பெருந்தன்மை காரணமாகவே அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கவில்லை. உங்களது மனுதாரர் அமைச்சராக இருந்தபோது, தெருநாய்கள் பராமரிப்பிற்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்தீர்கள்’ என்று நீதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளனர்.
