சென்னை: பூந்தமல்லி – வடபழனி இடையே மெட்ரோ ரயில் சேவைக்கு ரயில்வே வாரியம் இறுதிகட்ட ஒப்புதல் வழங்கியுள்ளது. மெட்ரோ சேவையின் இரண்டாம் கட்ட பணிகள் மாதாவரம் முதல் சிறுசேரி சிப்காட் வரையிலும், பூந்தமல்லி முதல் சென்னை கலங்கரை விளக்கம் வரையிலும், மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலும் மூன்று வழித்தடங்களில் 118.9 கிமீ தொலைவிற்கு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் முக்கிய வழித்தடமான பூந்தமல்லி முதல் கலங்கரை விளக்கம் வரை உள்ள வழித்தடத்தில் 26 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரயில் பணிகள் விறுவிறுப்பாக நடைப்ெபற்று வருகிறது. இதில் பூந்தமல்லி முதல் போரூர் இடையே 95 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் இறுதிக்கட்டப் பணிகள் மற்றும் கட்டடக்கலைப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வந்தது.
இந்த வழித்தடத்தில் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்று முடிவடைந்தது. அடுத்ததாக பூந்தமல்லி முதல் போரூர் இடையே பாதுகாப்பு சான்றிதழ் பெறுவதற்கான சோதனை ஓட்டப்பணிகள் தொடர்ந்து நடைபெற்றது. 90 கிலோ மீட்டர் வேகத்தில் மெட்ரோ ரயில்கள் இயக்கி பயணிகளின் பயண வசதி குறித்து மதிப்பீடு செய்யப்பட்டது. மேலும் ரயில் பெட்டிகளின் வசதி, பயணிகளின் பாதுகாப்பு, பிரேக்கிங் தொழிநுட்பம், தண்டவாளத்தின் தரம், கட்டுமானம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இந்நிலையில் பூந்தமல்லி முதல் போரூர் இடையிலான மெட்ரோ ரயில் பாதை சிக்னலுக்கு ரயில்வே வாரியம் ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்நிலையில் தற்போது பூந்தமல்லி முதல் வடபழனி இடையே மெட்ரோ ரயில் இயக்க மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு ரயில்வே வாரியம் இறுதிகட்ட ஒப்புதல் வழங்கியது.
ரயில்வே வாரியம் ஒப்புதலை அடுத்து பிப்ரவரி முதல் பூந்தமல்லி – வடபழனி இடையே மெட்ரோ ரயில் சேவை தொடங்க வாய்ப்பு உள்ளது. 15.8 கி.மீ நீளமுள்ள இந்த மெட்ரோ வழித்தடத்தில் சமீபத்தில் சோதனை ஓட்டங்கள் வெற்றிகரமாக நடந்த நிலையில், விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
