×

சென்னையில் மார்ச் மாதத்திற்குள் 20 இரண்டடுக்கு ஏசி மின்சார பேருந்துகளை இயக்க திட்டம்

 

சென்னை: சென்னை மாநகரில் 20 ஏசி மின்சார இரட்டை அடுக்கு பேருந்துகளை இயக்க மாநகர் போக்குவரத்துக் கழகம் திட்டமிட்டுள்ளது. சென்னையின் அடையாளமாக டபுள் டக்கர் எனப்படும் இரட்டை அடுக்கு பேருந்து இருந்தது. பல்வேறு காரணத்தினால் அது நிறுத்தப்பட்டது. இதனையடுத்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த பொங்கல் திருநாளை முன்னிட்டு மீண்டும் இந்த இரட்டை அடுக்கு தாழ்தள பேருந்தை கொடியசைத்து தொடங்கி வைத்திருந்தார். 1.89 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த பேருந்து தமிழ்நாடு சுற்றுலாத் துறைக்கு பரிசாக வழங்கப்பட்டது. இந்த நிலையில் சென்னையில் தனியார் நிறுவனங்கள் மூலம் மாநகர் போக்குவரத்துக் கழகம் மின்சார பேருந்துகளை வெற்றிகரமாக இயக்கி வருகிறது, அதன் தொடர்ச்சியாக, இப்போது மீண்டும் இரட்டை அடுக்கு பேருந்துகளை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.

சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்பு, இரட்டை அடுக்கு மற்றும் வெஸ்டிபுல் (vestibule) பேருந்து சேவைகள் நிறுத்தப்பட்டன. தற்போது, 20 இரட்டை அடுக்கு ஏசி மின்சார பேருந்துகளை வாங்குவதற்கான டெண்டர் அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் மார்ச் மாதத்திற்குள் இந்த பஸ்களை பயன்பாட்டிற்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மின்சார பேருந்துகளுக்கான உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்கனவே இருப்பதால், இந்த இரட்டை அடுக்கு பேருந்துகளை கிராஸ் காஸ்ட் கான்ட்ராக்ட் (GCC) திட்டத்தின் கீழ் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாநகர் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறுகையில்,’டெண்டர் செயல்முறை பிப்ரவரி மாதத்திற்குள் இறுதி செய்யப்படும். மார்ச் மாதத்திற்குள் இந்த இரட்டை அடுக்கு மின்சார பேருந்துகளை பயணிகள் பயன்பாட்டுக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது’ என்றனர்.

Tags : Chennai ,Municipal Transport Corporation ,
× RELATED பிரதமர் வருகையையொட்டி செங்கல்பட்டில்...