×

மனைவி, காதலியோடு ஆண்கள் அரசு பஸ்சில் பிரீயா போலாம்: எடப்பாடி அறிவிப்பு பற்றி ராஜேந்திரபாலாஜி ‘கிளுகிளு’

சிவகாசி: இனிமேல் ஆண்கள் மனைவியோடும், காதலியோடும் இலவசமாக அரசு பேருந்தில் பயணித்து சினிமாவிற்கு செல்லலாம், ஊர் சுற்றலாம் என முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசி உள்ளார்.விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அதிமுக மேற்கு மாவட்டம் மற்றும் மகளிரணி சார்பாக எம்ஜிஆர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேசியதாவது: எம்ஜிஆர் ஆட்சியை கொண்டு வருவோம் என சிலர் சொல்லி வருகிறார்கள். எம்ஜிஆர் ஆட்சியை அவரது தொண்டர்களால்தான் கொண்டுவர முடியும். அதிமுக அற்புதமான 5 தேர்தல் அறிக்கையை அறிவித்துள்ளது. எடப்பாடி பழனிசாமி ஆட்சி பொறுப்பேற்ற உடன், அனைத்து ரேஷன் அட்டைதாரர்களின் வங்கி கணக்கில் 2 ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்படும் திட்டத்தில்தான் முதல் கையெழுத்திடுவார். கருப்பு அட்டை, சிகப்பு அட்டை, சீனி அட்டை என்ற பாகுபாடு இல்லாமல் ரேஷன் அட்டை இருந்தால் அனைவருக்கும் 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். டெல்லியில் நாங்கள் வைத்துள்ள கூட்டணியால் அதிமுக தற்போது அறிவித்த திட்டங்களை நிறைவேற்ற முடியும்.

மகளிருக்கு மட்டும் இலவச பயண திட்டம் உள்ளது. பிரிந்த குடும்பங்களை சேர்க்கும் வகையில் ஆண்களுக்கும் இலவச பயணம் திட்டத்தை அறிவித்துள்ளார் எடப்பாடியார். இனிமேல் ஆண்கள் மனைவியோடும், காதலியோடும் இலவசமாக அரசு பேருந்தில் பயணித்து சினிமாவிற்கு செல்லலாம், ஊர் சுற்றலாம். எடப்பாடி பழனிசாமி அறிவிக்கும் தேர்தல் அறிக்கை அனைத்தும் அவரது சுய சிந்தனையில் உதித்த திட்டங்கள். யாரும் அவருக்கு ஆலோசனை வழங்கவில்லை. எம்ஜிஆர், ஜெயலலிதா ஆட்சியை எடப்பாடி பழனிசாமியால் மட்டுமே கொடுக்க முடியும். அதிமுக கூட்டணிக்கு ஏராளமானோர் வந்து கொண்டிருக்கிறார்கள். 23ம் தேதி தமிழகத்திற்கு வரும் பிரதமர் மோடி பங்கேற்கும் மேடையில் கூட்டணியில் சேர எத்தனை கட்சிகள் மேடை ஏற போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பாருங்கள். எம்ஜிஆர், ஜெயலலிதாவின் தொண்டர்கள் எல்லோரும் துப்பாக்கி போல் ஓரணியில்தான் நிற்போம். இவ்வாறு தெரிவித்தார்.

Tags : Rajendra Balaji ,Edappadi ,Sivakasi ,Former minister ,MGR ,AIADMK West District ,Mahalirani ,Virudhunagar district ,Sivakasi… ,
× RELATED சொல்லிட்டாங்க…