நன்றி குங்குமம் தோழி
எது பெஸ்ட்?
சில தினங்களுக்கு முன் முப்பது வயதுடைய பெண் ஒருவர் முதுகு வலி காரணமாக என்னிடம் இயன்முறை மருத்துவத்திற்காக வந்திருந்தார். கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பு அவருக்கு முதுகுத் தண்டுவட அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்தது. ஆனாலும், வலி சரியாகவில்லை என்றார்.
அவருடைய பிரதான கேள்வி இதுதான். ‘அறுவை சிகிச்சை செய்த பிறகும் ஏன் எனக்கு வலி இருக்கிறது? இனி நான் மேற்கொண்டு என்ன செய்ய வேண்டும்?’ இப்படி அவருக்கு மட்டுமல்ல… நம்மில் பலருக்கும் மனதில் அறுவை சிகிச்சையா? இயன்முறை மருத்துவம் மட்டும் போதுமா? என்ற சந்தேகம் இருக்கும். இதற்கான பதில்களை இந்தக் கட்டுரையில் காண்போம், வாருங்கள்.
அறுவை சிகிச்சை
தேவைப்படும் இடங்கள்…
1. மூட்டு ஜவ்வு (Ligament) முற்றிலும் கிழிந்திருந்தால். 2. மூட்டு 90 சதவிகிதம் தேய்மானமாகி இருந்தால். 3. முதுகுத் தண்டுவடத்தில் உள்ள ஜெல்லி போன்ற திசு தட்டுகள் (Intervertebral discs) பிதுங்கினால் அது பக்கத்தில் செல்லும் நரம்புகளை அழுத்தத் தொடங்கும். இதனால் கை, கால் மறுத்துப் போவது, குடைவது, வலி போன்ற அறிகுறிகள் ஏற்படும். இதனை சரி செய்ய அறுவை சிகிச்சை தேவைப்படுகிறது.
மேலே சொன்ன மூன்று காரணங்கள் தவிர அறுவை சிகிச்சை செய்ய அவசியமான காரணம் பல இருக்கின்றன. ஆனால், இவை மூன்றிலும் அறுவை சிகிச்சையை தவிர்க்க முடியும்.
அறுவை சிகிச்சை…
சாதகங்கள்
ஜவ்வு அறுந்ததை முழுமையாக சரி செய்ய முடியும்.
பாதகங்கள்
*அறுவை சிகிச்சை செய்தாலும் இயன்முறை மருத்துவ உடற்பயிற்சிகளை பின்பும் தொடர வேண்டும்.
*அறுவை சிகிச்சை செய்த பிறகு சில மாதங்களுக்கு ஓய்வு எடுப்பதால் அதுவே பழகிவிடும். சிலருக்கு அதுவே மீண்டும் வலி வரும் அபாயத்தை உண்டாக்குகிறது.
* பலர் அறுவை சிகிச்சை செய்தால் போதும் மற்றதெல்லாம் தானாக சரியாகிவிடும் என நினைத்து ஆரம்பத்தில் இருந்து நிறைய அசைவுகளை உடலுக்கு தரமாட்டார்கள். இதனால் அறுவை சிகிச்சை செய்த முழு பலனை அனுபவிக்க இயலாது.
* வலியின் வேர் காரணமான தசை பலவீனத்திற்கும் (Weakness), தசை இறுக்கமாக (Tightness) இருப்பதற்கும் அறுவை சிகிச்சையில் எந்தவிதமான பங்கும் இல்லை என்பதால் அறுவை சிகிச்சையால் பயன் இல்லை.
* அறுவை சிகிச்சை செய்வதற்கு அதிகப் பணம் தேவைப்படுகிறது.
இயன்முறை மருத்துவம்…
சாதகங்கள்
* எந்தவிதமான பக்க விளைவுகளும் இல்லாத மருத்துவம்தான் இயன்முறை மருத்துவம்.
* அறுவை சிகிச்சைதான் தீர்வு என நாம் நினைத்தாலும் உடற்பயிற்சிகள் மூலம் அதனை தவிர்க்க முடியும்.
* ஜவ்வு முழுமையாக கிழிந்திருந்தாலும், அறுவை சிகிச்சை செய்யாமல் ஒரு பக்கம் ஜவ்விற்கு ஓய்வு கொடுத்துக் கொண்டே, ஒரு பக்கம் எளிய உடற்பயிற்சிகள் செய்யலாம். ஒரு கட்டத்தில் வலியில்லாமல் ஸ்திரமாய் நம்மால் நடக்க முடியும்.
* உடற்பயிற்சிகள் செய்யத் தொடங்கிய பின் ஒருவரின் வாழ்க்கைத் தரம் (Quality of living) நன்றாக இருக்கும்.
* 100% வலியில்லாத வாழ்க்கைக்கு உத்தரவாதம் இருக்கும்.
* இயன்முறை மருத்துவத்தில் வலியின் வேர் காரணமான தசைகளை சரி செய்வதால் வலி மீண்டும் வராது.
* அறுவை சிகிச்சையை விட இயன்முறை மருத்துவத்திற்கு ஆகும் செலவு குறைவுதான்.
பாதகங்கள்
*இயன்முறை மருத்துவத்தின் உடற்பயிற்சிகள் குறித்து பலருக்கும் போதிய விழிப்புணர்வு இல்லை. மேலும், உடற்பயிற்சிகள் செய்வதற்கு நாம் தயங்குவதும், எந்த முயற்சியும் செய்யாமல் நோய் தானாகவே சரியாக வேண்டும் என நினைப்பதும் அறுவை சிகிச்சையை நாட வைக்கிறது.
எதனை தேர்வு செய்வது..?
ஒப்பிடுகையில் இயன்முறை மருத்துவத்தில் போதுமான சாதகங்கள் இருப்பதாலும், அறுவை சிகிச்சையில் பாதகங்கள் இருப்பதாலும் இயன்முறை மருத்துவத்தை தேர்வு செய்வதே அவசியமாக இருக்கிறது.மொத்தத்தில் நம் உடம்பில் வலி வருவதற்கு முன் தடுப்பதற்கும் இயன்முறை மருத்துவம் உதவுகிறது.
வலி வந்த பிறகு நூறு சதவிகிதம் அதனை குணப்படுத்துவதற்கும் இயன்முறை மருத்துவம் உதவுகிறது என்பதை புரிந்து, கை மேல் கனியாக பலன் தரும் உடற்பயிற்சிகளை தினந்தோறும் செய்து வருவது அவசியம். மேலும், சுய ஒழுக்கமே பாதி நோய்களுக்கு முற்றுப்புள்ளியாக இருக்கும் என்பதால் பிறந்திருக்கும் இந்தப் புத்தாண்டில் சிறப்பாக உடற்பயிற்சிகள் செய்து ஆரோக்கியமாக இருப்போம்.
கோமதி இசைக்கர் இயன்முறை மருத்துவர்
