சென்னை, ஜன.20: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன் வெளியிட்ட அறிக்கை:
நாடு முழுவதும் ஊரகப் பகுதிகளில் உள்ள உடல் உழைப்புத் தொழிலாளர்கள், விவசாயத் தொழிலாளர்கள் குடும்பங்கள் ஆண்டுக்கு 100 நாள் சட்டபூர்வ வேலை பெறும் உரிமை வழங்கிய மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தை பாஜ ஒன்றிய அரசு கடந்த 2025 டிசம்பர் 16ம் தேதி நீக்கி விட்டு, விபி-ராம்ஜி சட்டத்தை நிறைவேற்றியுள்ளது.
இதன் மூலம் 15 கோடி குடும்பங்களில் உள்ள 26 கோடி தொழிலாளர்களின் வேலை பெறும் உரிமையை பறித்து, அவர்களது வாழ்வாதாரத்தை நிலை குலைத்துள்ளது.
தமிழ்நாடு, கேரளம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்கள், அதன் மாநில சட்டமன்ற தேர்தலை எதிர்கொண்டுள்ள நிலையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தை நீக்கியிருப்பதும், பெரும்பான்மை மதச்சார்பு நிலையில் இருந்து விபி ஜிராம்ஜி சட்டத்தை நிறைவேற்றியிருப்பதும் சமூக நல்லிணக்க சூழலுக்கு கேடு விளைவிக்கும் நோக்கம் கொண்டதாகும்.
ஜிஎஸ்டி சட்டத்தின் மூலம் தமிழ்நாட்டின் நிதி ஆதாரத்திற்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியது.
100 நாள் வேலை திட்ட ஊதியத்திற்கு வழங்க வேண்டிய நிதி உள்பட பல துறைகளுக்கு வழங்க வேண்டிய நிதியை நிறுத்தி வைத்து நிர்ப்பந்திப்பது என்ற நிலையில் விபி ஜிராம்ஜி சட்டத்தின் மூலம் 40 சதவீத நிதியை ஏற்க வேண்டும் என மாநில அரசிற்கு கூடுதல் நிதி சுமையை ஏற்றியுள்ளது.
இந்நிலையில் இன்று கூடும் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக் கூட்டத்தில் விபி-ஜிராம்ஜி சட்டத்தை ரத்து செய்து, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தை மேலும் வலுப்படுத்தி, மீண்டும் செயல்படுத்துமாறு ஒன்றிய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு, தமிழ்நாடு அரசைக் கேட்டுக் கொள்கிறது.
