சென்னை, ஜன.20: காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் போக்குவரத்து கழக ஊழியர்கள், பயணியை தாக்கும் வீடியோ வைரலான சம்பவம் குறித்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து தினம்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வெளி மாவட்டங்களுக்கும், மாநிலங்களுக்கும் பயணித்து வருகின்றனர். பொங்கல் பண்டிகை முடிந்து ஏராளமானோர் சொந்த ஊர்களில் இருந்து பணியிடங்களுக்கு நேற்று திரும்பி கொண்டிருந்தனர். அந்த வகையில், நேற்று முன்தினம் பகல் காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் பயணி ஒருவர், மேலமருவத்தூர் செல்ல நீண்ட நேரமாக பேருந்து இல்லாததால், இதுகுறித்து அங்கிருந்த போக்குவரத்துக் கழக ஊழியர்களிடம் கேட்டுள்ளார்.
அப்போது, அங்கு வாக்குவாதம் ஏற்பட்டு பயணியை ஊழியர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கேட்டபோது, காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் உள்ள மணிக்கூண்டு அருகே சென்னையிலிருந்து – காஞ்சிபுரம் வந்த அரசு பேருந்தை வழியிலேயே நிறுத்தி பயணிகளை இறக்கிய நிலையில், பயணி பேருந்து ஓட்டுநரை தகாத வார்த்தைகளால் பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அப்போது, போக்குவரத்து கழக ஊழியர்கள் சென்று, பயணிகளை இறக்கிக் கொண்டிருப்பதை கூறிய நிலையில், அவர்களிடமும் பயணி வாக்குவாதத்தில் ஈடுபட்டு தாக்கியதால், போக்குவரத்துக் கழக ஊழியர்கள் அந்த பயணியை தாக்கியதாக போக்குவரத்து கழக ஊழியர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இதுகுறித்து வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுகுறித்து சிவகாஞ்சி போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
