மும்பை: மும்பையில் பாஜக எம்பி வீட்டில் பணம் திருடிய முன்னாள் வேலைக்காரரை போலீசார் கைது செய்தனர். மகாராஷ்டிரா மாநிலம் மும்பை அந்தேரி பகுதியில் வசிக்கும் நடிகர் மற்றும் பாஜக எம்பி மனோஜ் திவாரியின் வீட்டில், கடந்த 2025ம் ஆண்டு ஜூன் மாதம் 4.4 லட்சம் ரூபாய் பணம் காணாமல் போனது. வீட்டின் பூட்டு உடைக்கப்படாத நிலையில் திருடியது யார் என்பதை அப்போது கண்டறிய முடியவில்லை. அந்த வீட்டில் ஏற்கனவே வேலை செய்து வந்த சுரேந்திர சர்மா என்பவர், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒழுங்கீனமான நடவடிக்கை காரணமாக வேலையிலிருந்து நீக்கப்பட்டிருந்தார். இதற்கிடையில் வீட்டில் மீண்டும் திருட்டு நடைபெறாமல் தடுக்க, மனோஜ் திவாரியின் மேலாளர் பிரமோத் பாண்டே வீட்டின் உள்ளே ரகசிய சிசிடிவி கேமராக்களை பொருத்தியிருந்தார்.
இந்நிலையில் கடந்த 15ம் தேதி இரவு 9 மணியளவில் மேலாளரின் செல்போனுக்கு கேமரா வழியாக எச்சரிக்கை குறுந்தகவல் வந்தது. அதில் சுரேந்திர சர்மா கள்ளச்சாவி மூலம் வீட்டிற்குள் நுழைந்து, படுக்கையறையில் இருந்த 1 லட்சம் ரூபாயை திருடுவது பதிவாகி இருந்தது. உடனடியாக குடியிருப்பின் பாதுகாவலர்கள் உதவியுடன் அவரை மடக்கி பிடித்து அம்போலி போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் ‘தான் ஏற்கனவே 4.4 லட்சம் ரூபாயை திருடியதாகவும், தற்போது 1 லட்சம் ரூபாயை திருடியதாகவும்’ அவர் ஒப்புக்கொண்டார். மொத்தம் 5.4 லட்சம் ரூபாய் திருடிய குற்றத்திற்காக போலீசார் அவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.
