புதுடெல்லி: மந்திர சிகிச்சை மற்றும் போலி மருந்து விளம்பரங்களை தடுக்க ஐந்து யூனியன் பிரதேச நிர்வாகிகளுக்கு ஒன்றிய அரசு முழு அதிகாரம் வழங்கியுள்ளது. பொதுமக்களை ஏமாற்றும் வகையிலான மந்திர தாயத்துகள் மற்றும் போலியான மருத்துவ சிகிச்சைகள் தொடர்பான கவர்ச்சிகரமான விளம்பரங்களை கட்டுப்படுத்தவும், அதன்மூலம் அப்பாவி மக்களின் உயிருக்கு ஏற்படும் ஆபத்தை தடுக்கவும் 1954ம் ஆண்டு மருந்துகள் மற்றும் மந்திர சிகிச்சைகள் சட்டம் அமல்படுத்தப்பட்டது. கடந்த காலங்களில் இந்த சட்டத்தின் கீழ் மாநில அரசுகளுக்கு மட்டுமே நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் இருந்த நிலையில், நேரடி கட்டுப்பாட்டில் உள்ள யூனியன் பிரதேசங்களில் இதனை முழுமையாக செயல்படுத்துவதில் பல்வேறு நிர்வாக ரீதியிலான சிக்கல்கள் நீடித்து வந்தன.
இந்நிலையில் மக்களின் நலனை கருத்தில்கொண்டு ஜம்மு காஷ்மீர், புதுச்சேரி, சண்டிகர், லட்சத்தீவு மற்றும் தாத்ரா நாகர் ஹவேலி டாமன் டையூ ஆகிய 5 யூனியன் பிரதேசங்களின் துணைநிலை ஆளுநர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு, மாநில அரசுகளுக்கு இணையான அதிகாரத்தை வழங்கி ஒன்றிய உள்துறை அமைச்சகம் இன்று முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. இதன்படி அரசியல் சாசனத்தின் 239(1) பிரிவின் கீழ், ‘தவறான தகவல்களை பரப்பும் விளம்பரங்களை கண்காணித்து சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்கு தொடர்ந்து கடும் சட்ட நடவடிக்கை எடுக்கவும், இணையதளம் மற்றும் அச்சு ஊடகங்களில் வரும் அறிவியல் பூர்வமற்ற போலி அறிவிப்புகளை தடை செய்யவும் அந்தந்த நிர்வாகிகளுக்கு முழு அதிகாரம் அளிக்கப்படுகிறது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
