×

ஆள்மாறாட்டம்… மலிவு விலை… பணம் பறிப்பு!

நன்றி குங்குமம் தோழி

ஒரு புடவையின் விலை ரூ.299 என்ற விளம்பரம் பார்த்தவுடனே ஆர்டர் செய்திட வேண்டும். இதுதான் தற்போது ஆன்லைன் மூலம் பொருட்களை வாங்கும் பெரும்பாலான மக்களின் மனநிலை. ஆன்லைனில் பொருட்கள் வாங்குவது குறிப்பாக பெண்கள் மத்தியில் வாடிக்கையாகிவிட்டது. உடைகள் மட்டுமின்றி அழகுசாதனப் பொருட்கள், நகைகள் உட்பட அனைத்தையும் வெறும் குறுஞ்செய்திகள் வழியே ஆர்டர் செய்து, ஆன்லைன் பரிவர்த்தனை மூலம் பணம் செலுத்தி வாங்கிவிடுகிறோம்.

அதே சமயம் போலியான மோசடி கும்பலிடம் சிக்கி மக்கள் பணத்தை இழக்கும் சம்பவங்களும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. வாடிக்கையாளர்கள் மட்டுமின்றி, ஆன்லைன் மூலம் சிறு தொழில் செய்கின்ற வளர்ந்துவரும் தொழில்முனைவோர்களும் இந்த மோசடியில் சிக்குகிறார்கள். ஒரு உண்மையான ப்ராண்ட் பெயரிலேயே பல்வேறு போலியான சமூக வலைத்தள பக்கங்களை தொடங்கி, மலிவு விலையினை அறிவித்து, பொருட்களை வாங்க வைத்து, பணம் பறிக்கும் மோசடிகள் பெருகி வருகின்றன. ஏமாற்றமடைந்தவர்கள், உண்மையான ப்ராண்ட் உரிமையாளரை கடுமையாக குற்றம் சாட்டுவதால் அவர்களின் தொழில் பாதிக்கப்படும் அபாயத்தில் உள்ளனர்.

இந்த மோசடியில் பாதிக்கப்பட்டவர் டிஎஸ்ஆர் சாரீஸ் (DSR Sarees) நிறுவனத்தின் உரிமையாளர் மைதிலி. இவரின் ப்ராண்ட் பெயரிலேயே போலி விற்பனை தளத்தினை உருவாக்கி, அதன் மூலம் மோசடி செய்துள்ளனர். இதனால் வியாபார சரிவு, வாடிக்கையாளர்கள் இழப்பு மற்றும் மன அழுத்தம் போன்றவற்றால் பாதிப்படைந்துள்ளார். அது குறித்த தகவல்களை பகிர்ந்தார் மைதிலி.

“எங்க ப்ராண்ட் பெயரில் மட்டுமே பத்தாயிரம் போலியான லிங்குகள் மூலம் மோசடிகள் நடந்துள்ளன. பெரும்பாலும் பெண்களுக்கான பொருட்களை விற்பனை செய்யும் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பெற்ற, அதிகமான ஃபாலோவர்ஸ்களை பெற்ற, சிறு வணிக ப்ராண்டுகளைதான் இவர்கள் குறிவைக்கிறார்கள். அந்தக் குறிப்பிட்ட ப்ராண்ட் பெயரில் பல்வேறு போலியான சமூக வலைத்தள பக்கத்தைத் தொடங்கி மக்களை ஏமாற்றுகின்றனர்.

அதில் எங்க ப்ராண்டும் ஒன்று. எங்களின் வலைத்தள பக்கங்களில் உள்ள வீடியோக்களை அனுமதியின்றி எடுத்து போலியான பக்கங்களில் பதிவிடுகின்றனர். மேலும், ப்ராண்டின் லோகோ, கடையின் விலாசம், தொலைபேசி எண் என எங்களின் அனைத்து விவரங்களையும் பயன்படுத்துகின்றனர். சமூக வலைத்தளங்களில் ரன்னிங் ஆட்ஸ் முறையில் புடவையின் விலை ரூ.299 என்று விளம்பரம் செய்யப்பட்டிருக்கும்.

மக்களும் நம்பகமான நிறுவனத்தில் இருந்து விளம்பரம் செய்யப்பட்டிருப்பதாக நினைத்து அந்த லிங்கை க்ளிக் செய்துவிடுகிறார்கள். அது சம்பந்தப்பட்ட சமூக வலைத்தள பக்கத்திற்கு செல்லாமல் நேரடியாக மோசடி செய்பவர்களின் வாட்ஸ்ஆப் எண்ணிற்கு செல்லும். இதன் மூலம் வாடிக்கையாளர்களிடம் உரையாடலை தொடங்கி பணம் பறிக்கின்றனர்.

வாடிக்கையாளர்கள் பணத்தை திரும்ப பெறும் கால அவகாசம் முடியும் வரை, ‘பொருட்களை பேக்கிங் செய்கிறோம், விரைவில் அனுப்பிவிடுவோம்’ என்று பதிலளித்துக் கொண்டே இருப்பார்கள். அந்தக் குறிப்பிட்ட காலம் முடிவடைந்ததும், பணம் திரும்ப பெற முடியாத நிலையில் வாடிக்கையாளரை பிளாக் செய்துவிடுவார்கள். மோசடி செய்பவர்கள் விளம்பரங்களை உத்தியாக பயன்படுத்துவதால் போலி வலைத்தள பக்கத்தின் ஃபாலோவர்ஸ் எண்ணிக்கை, வீடியோக்களை மக்களால் பார்க்க முடிவதில்லை. பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் ஏமாற்றமடைந்ததை உணர்ந்ததும் எங்க நிறுவனத்தை தொடர்பு கொள்கின்றனர்” என்ற மைதிலி, வாடிக்கையாளர்களை போலவே தானும் பாதிக்கப்பட்டிருப்பதை குறிப்பிடுகிறார்.

“தமிழ்நாட்டில் மட்டுமின்றி பிற மாநிலங்களிலிருந்தும் இது போல் ஏமாற்றப்பட்டுள்ளனர். சில வாடிக்கையாளர்கள் உஷாராகி புகாரளிக்க போவதாகக் கூறியதும், எங்களின் உண்மையான சமூக வலைத்தள பக்கம், கடையின் முகவரி, தொலைபேசி எண்ணை கொடுத்துவிட்டு ‘புகார் கொடுங்க’ என்று மோசடிக்காரர்கள் தைரியமாக சொல்கிறார்கள். வாடிக்கையாளர்கள் எங்களை அணுகும் போது மோசடிகள் நடப்பது குறித்து நாங்க விளக்கினாலும், சிலர் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள். இதனால் நாங்கதான் ஏமாற்றுகிறோம் என்று தவறாக புரிந்து கொண்டு எங்களை குறித்த தவறான கருத்துக்களை பகிர்கின்றனர். அவர்களின் பண இழப்பு எங்களுக்கும் வருத்தம்தான். ஆனால், இதில் நாங்களும் பாதிக்கப்படுகிறோம் என்பதை வாடிக்கையாளர்களும் புரிந்துகொள்ள வேண்டும்.

நான் எட்டு வருடங்களாக இந்தத் தொழிலில் ஈடுபட்டு வருகிறேன். திருவண்ணாமலை, ஒண்ணுபுரம் எனும் ஊரில் கடையும் உள்ளது. மோசடி கும்பலிடம் ஏமாந்த வாடிக்கையாளர்களின் கருத்துக்களால் நான் தீவிர மன உளைச்சல்களுக்கு ஆளாகியிருக்கிறேன். இருப்பினும் வாடிக்கையாளர்களுக்கு எங்களால் முடிந்த ஆலோசனைகளை வழங்குகிறோம். இதுவரை 400க்கும் மேற்பட்ட போலியான எண்ணின் மூலம் மோசடிகள் நடந்துள்ளன.

ஒரே மாதிரியான மொபைல் எண்களை வைத்து இது போன்ற மோசடிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். எனவே, ஏமாற்றமடைந்த மக்கள் உடனடியாக சைபர் க்ரைமில் புகாரளிக்க வேண்டும் என்பதை கேட்டுக்கொள்கிறேன். சைபர் கிரைம், தொலைத்தொடர்புத் துறை மற்றும் என்சிபிஐ (NCPI) ஆகியவற்றில் நான் அளித்த புகாரின் அடிப்படையில் மோசடியில் ஈடுபட்ட சில சிம் கார்டுகள் முடக்கப்பட்டுள்ளன” என்றார் மைதிலி.

ஆன்லைன் மோசடிகள் குறித்தும், அதிலிருந்து தொழில்முனைவோர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் எவ்வாறு பாதுகாப்பாக இருக்கலாம் என்பதற்கான வழிமுறைகளை வழங்கினார் சைபர் க்ரைம் புலனாய்வாளர் சுபாஷ் ஜெகநாதன். “மோசடிகள் செய்பவர்களின் மிகப்பெரிய பலமே யாரும் புகார் செய்ய மாட்டார்கள் என்பதுதான். ரூ.299 மிகப்பெரிய இழப்பில்லை என்று ஒவ்வொருவரும் நினைத்து அதை கடந்துவிடுகிறார்கள். இதுவே அவர்களுக்கு சாதகமாக அமைகிறது. அவர்களின் மோசடி பெரிய அளவில் வெளியில் தெரியாத வரை அது தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்.

ஏமாற்றமடைந்த ஒவ்வொருவரும் முன்வந்து புகார் செய்தால் மட்டுமே அதற்கான நடவடிக்கை எடுக்க முடியும். உதாரணத்திற்கு கடந்த சில காலங்களுக்கு முன் லோன் ஆப்கள் மூலம் நிறைய மோசடி சம்பவங்கள் நடைபெற்று வந்தன. பாதிக்கப்பட்டவர்கள் பயத்தினால் புகாரளிக்காமல் விட்டதால் இதுபற்றி அதிகம் வெளியே தெரியவில்லை. இப்போது மக்கள் விழிப்புணர்வடைந்து புகாரளிக்கத் தொடங்கியதும், மோசடி செய்பவர்களை கண்டறிந்து தீவிரமான நடவடிக்கை எடுத்ததால், தற்போது லோன் மோசடிகள் குறைந்துள்ளன. பொது மக்கள் ஆன்லைனில் பொருட்களை வாங்குவதற்கு முன் அந்நிறுவனம் குறித்த விவரங்களை தெளிவாக ஆராய வேண்டும்.

ஆர்டர் செய்யும் முன் நேரடியாக அந்நிறுவனத்தின் எண்ணை தொடர்பு கொண்டு உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். ஆன்லைன் மூலம் பணம் செலுத்தும் போது அந்த வணிகத்தின் அதிகாரப்பூர்வ பெயர் வருகிறதா என்பதை சரிபார்க்க வேண்டும். மோசடி செய்யப்பட்டிருப்பதை அறிந்தால் 24 மணி நேரத்திற்குள் புகாரளிக்க வேண்டும். காலதாமதம் செய்வதால் பணம் திரும்பக் கிடைக்கும் வாய்ப்பு குறையலாம். cybercrime.gov.in என்கிற இணையதளத்திலோ அல்லது 1930 என்ற எண்ணிலோ புகார் அளிக்கலாம். புகாரளிக்கப்பட்ட சான்று நகலை வங்கிக்கு அனுப்பி ஸ்கேமரின் கணக்கை முடக்கச் சொல்ல வேண்டும் அல்லது யுபிஐ ஆப்கள் மூலம் பணம் செலுத்தியிருந்தால் அந்நிறுவனத்திற்கு சான்று நகலை அனுப்ப வேண்டும்.

தொழில்முனைவோர்கள் குறிப்பாக ஆன்லைன் மூலம் சிறு தொழில் செய்யும் நிறுவனத்தின் உரிமையாளர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிடும் வீடியோக்கள் மூலம் நேரடியாக தாங்களே வாடிக்கையாளர்களிடம் அறிமுகம் ஆகியிருக்க வேண்டும். உங்க ப்ராண்டுக்கான ஸ்டைல், ஆர்டர்கள் எடுக்கும் முறை போன்றவற்றை வாடிக்கையாளர்களுக்கு குறிப்பாக சமூக வலைத்தள பயனாளர்களுக்கு தெளிவாக காண்பிக்க வேண்டும். சமூக வலைத்தள பக்கத்தின் ஐடியை ஒவ்வொரு வீடியோக்களிலும் வாட்டர் மார்க்காக பயன்படுத்தலாம்.

வீடியோக்கள் திருடப்பட்டு மோசடி பக்கங்களில் பதிவேற்றப்பட்டிருந்தால் ஐடி பெயர் மாற்றத்தை வைத்து கண்டறிய உதவியாக இருக்கும். ஒவ்வொரு வீடியோவின் தொடக்கத்திலும் முடிவிலும் தொடர்பு எண்களை குறிப்பிட வேண்டும். போலி பக்கங்கள் குறித்துத் தொடர்ந்து வாடிக்கையாளர்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும். இன்ப்ளூயன்சர்கள் விளம்பரத்திற்காக ஒரு கடையை பற்றிப் பேசும் முன், உண்மைத்தன்மையை ஆராய்ந்து விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.

மோசடி செய்யப்பட்டவர்கள் குறைந்த தொகை தானே என்று இருந்துவிடக் கூடாது. பாதிக்கப்பட்ட உரிமையாளர் மற்றும் வாடிக்கையாளர் என இருதரப்பினரும் புகார் அளிப்பது மட்டுமே இதற்கான தீர்வாக அமையும். மோசடிகள் நடப்பது வெளியே தெரியவந்தால்தான் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு மோசடிகள் குறைக்கப்படும். நாளை உங்களை போல மற்றவர்களும் ஏமாறுவது தடுக்கப்படும்” என்றார் சைபர் க்ரைம் புலனாய்வாளர் சுபாஷ் ஜெகநாதன்.

தொகுப்பு: ரம்யா ரங்கநாதன்

Tags :
× RELATED இனி, ஆடைகளும் தமிழர் வரலாறு பேசும்!