- முதல் அமைச்சர்
- மு.கே ஸ்டாலின்
- மணி மண்டபம்
- இமானுவேல் சேகரன்
- பரமக்குடி
- பரமக்குடி, ராமநாதபுரம் மாவட்டம்
- தமிழக அரசு…
பரமக்குடி: பரமக்குடியில் ரூ.3 கோடி மதிப்பில் கட்டப்பட்ட தியாகி இமானுவேல் சேகரன் சிலையுடன் மணிமண்டபத்தை, முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் தமிழக அரசு சார்பாக ரூ.3 கோடி மதிப்பில் தியாகி இமானுவேல் சேகரனாருக்கு மணிமண்டபம் கட்டி முடிக்கப்பட்டது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. ஜல்லிக்கட்டு போட்டிகளை பார்வையிடுவதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று அலங்காநல்லூர் சென்றார். அதன் பின்னர், அங்கிருந்து பரமக்குடி வருகை தந்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பரமக்குடி நகராட்சி எல்லையான தெளிச்சாத்தநல்லூர் பகுதியில் திமுக சார்பாக, மாவட்டச் செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்எல்ஏ தலைமையில் வனத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், பரமக்குடி எம்எல்ஏ முருகேசன் ஆகியோர் வரவேற்றனர்.
தொடர்ந்து பரமக்குடி – ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் இருபுறங்களிலும் பொதுமக்கள் நின்று முதல்வருக்கு உற்சாகமான வரவேற்பளித்தனர். சுமார் 2 மணிநேரம் மக்கள் வெள்ளத்தில் உற்சாகத்துடன் கை அசைத்து வரவேற்பை முதல்வர் பெற்றுக் கொண்டார். பின்னர் தியாகி இமானுவேல் சேகரன் மணிமண்டபம் அமைந்துள்ள சந்தை கடை திடலை அடைந்தார். தொடர்ந்து, இமானுவேல் சேகரன் மணிமண்டபம், அங்குள்ள அவரது உருவச்சிலையை திறந்து வைத்து உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் மணிமண்டபத்தில் உள்ள அரங்கினை பார்வையிட்டு, இமானுவேல் சேகரன் வாழ்க்கை வரலாறு குறித்த குறும்படத்தை எல்இடி திரையில் பார்த்தார். தொடர்ந்து, உலகநாதபுரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் கட்சியினரை சந்தித்து பேசினார். மாற்று கட்சிகளில் இருந்து திமுகவில் இணைந்த 100க்கும் மேற்பட்டவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். பின்னர் மதுரை – பரமக்குடி நான்கு வழிச்சாலை வழியாக மதுரை விமானநிலையம் சென்றார். அங்கிருந்து விமானம் மூலம் சென்னை கிளம்பிச் சென்றார்.
