கம்பாலா: உகாண்டாவில் தேர்தல் வன்முறை வெடித்துள்ள நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் ராணுவத்தினரால் பலவந்தமாக அழைத்துச் செல்லப்பட்டார். கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் 38 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் அதிபர் யோவேரி முசெவேனி (81) எதிர்த்து, பிரபல பாப் பாடகரும் எதிர்கட்சி தலைவருமான பாபி வைன் (43) என்பவர் போட்டியிட்டார். நேற்று முன்தினம் நடைபெற்ற தேர்தலில், வாக்குப்பதிவு இயந்திரங்களில் மோசடி நடந்ததாகவும், இந்த தேர்தல் ஒரு நாடகம் என்றும் பாபி வைன் குற்றம் சாட்டினார்.
தேர்தலுக்குப் பிந்தைய மோதல்களில் பலர் உயிரிழந்துள்ளனர். மேலும், இணைய சேவை முடக்கப்பட்டதால் உண்மை நிலவரம் தெரியாமல் மக்கள் குழப்பத்தில் உள்ளனர். தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு முன்னரே முசெவேனி 76 சதவீத வாக்குகளுடன் முன்னிலையில் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தேசிய ஒற்றுமை மேடை கட்சியின் தலைவரான பாபி வைன் வீட்டை ராணுவத்தினர் சுற்றி வளைத்து வீட்டுச் சிறையில் வைத்திருந்தனர். ஆனால், நேற்று திடீரென அவரது வீட்டின் வளாகத்திற்குள் ஒரு ராணுவ ஹெலிகாப்டர் தரையிறங்கியது.
அதிலிருந்து குதித்த ராணுவ வீரர்கள், பாதுகாவலர்களைத் தாக்கிவிட்டு பாபி வைனை வலுக்கட்டாயமாக ஹெலிகாப்டரில் ஏற்றிச் சென்றனர். அவர் எங்கு அழைத்துச் செல்லப்பட்டார் என்பது தெரியவில்லை என்று அவரது கட்சியினர் கூறியுள்ளனர். இதுகுறித்து ராணுவம் மற்றும் காவல்துறை தரப்பில் எவ்வித விளக்கமும் அளிக்கப்படவில்லை. இந்தச் சம்பவம் அந்நாட்டில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
