மும்பை: மும்பை மாநகராட்சியை கைப்பற்ற பாஜக துடிக்கும் நிலையில் கூட்டணி கட்சியான ஷிண்டே தரப்பு மேயர் பதவியை கேட்டு நெருக்கடி கொடுத்து வருகிறது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பை மாநகராட்சிக்கு அண்மையில் நடந்த தேர்தலில் பாஜக தனிப்பெரும் கட்சியாக 90 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. மொத்தம் உள்ள 227 வார்டுகளில் மேயர் பதவியைப் பிடிக்க 114 இடங்கள் தேவை என்ற நிலையில், பாஜகவிற்கு அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. கடந்த 30 ஆண்டுகளாக மேயர் கனவில் இருந்த பாஜகவிற்கு, தற்போது 29 இடங்களை வென்றுள்ள ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவின் ஆதரவு கட்டாயம் தேவைப்படுகிறது. ஆனால், ஆட்சியமைக்கத் தேவையான இடங்களை வைத்திருப்பதால் ஷிண்டே தரப்பு தனது முக்கியத்துவத்தை உணர்ந்து பேரம் பேசத் தொடங்கியுள்ளது.
இந்நிலையில், தற்போதைய தகவல்களின்படி, கூட்டணிக்குள் பதவிப் பகிர்வு விவகாரம் சூடுபிடித்துள்ளது. தானே மாநகராட்சியில் 75 இடங்களை வென்று பலத்தை நிரூபித்துள்ள ஷிண்டே, மும்பையில் சுழற்சி முறையில் இரண்டரை ஆண்டுகள் மேயர் பதவி வேண்டுமெனக் கோரிக்கை விடுத்துள்ளார். அல்லது 74 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை கையாளும் அதிகாரம் கொண்ட நிலைக்குழுத் தலைவர் பதவியையாவது தங்களுக்குத் தர வேண்டும் என்று அவர் நிபந்தனை விதிப்பதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து மும்பை பாஜக தலைவர் அமித் சாதம் கூறுகையில், ‘கூட்டணித் தலைவர்களுடன் பேசி முடிவு செய்யப்படும்’ என்றார். ஆனால் சபாநாயகர் ராகுல் நர்வேகர், ‘நூறு சதவீதம் பாஜகவை சேர்ந்தவரே மேயராக வருவார்’ என்று நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
