×

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அதிமுக முதல்கட்ட தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்தார் எடப்பாடி பழனிச்சாமி

 

சென்னை: தமிழ் நாட்டில் 17-வது சட்டமன்றப் பேரவைக்கான பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதை முன்னிட்டு, மக்கள் நலன் ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டு வரும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அளிக்கப்படும் முதல் கட்ட தேர்தல் வாக்குறுதிகளை எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார்

* மகளிர் நலன்: (குல விளக்குத் திட்டம்)

சமூகத்தில் பொருளாதார சமநிலையை உருவாக்கிட, குலவிளக்கு திட்டத்தின் மூலம் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும், ஒவ்வொரு மாதமும் உதவித் தொகையாக ரூபாய் 2,000/- வழங்கப்படும். இத்தொகை குடும்பத் தலைவியின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.

* ஆண்களுக்கும், மகளிருக்கும் கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டம்:

நகரப் பேருந்துகளில் பயணம் செய்யும் ஆண்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டம் செயல்படுத்தப்படும். ஏற்கெனவே நடைமுறையில் இருக்கும், நகரப் பேருந்துகளில் பயணம் செய்யும் மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.

* அனைவருக்கும் விடு(அம்மா இல்லம் திட்டம்)

‘அம்மா இல்லம் திட்டம்’ மூலம், கிராமப்புறங்களில் குடியிருப்பதற்கு சொந்த வீடு இல்லாதவர்களுக்கு, அரசே இடம் வாங்கி கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும். அதேபோல், நகரப் பகுதிகளில் சொந்த வீடு இல்லாதவர்களுக்கு, அரசே இடம் வாங்கி அடுக்குமாடி வீடுகள் கட்டி ‘அம்மா இல்லம் திட்டம்’ மூலம் விலையில்லாமல் வழங்கப்படும்.

அதைப் போலவே, ஒரே குடும்பத்தில் வசிக்கும் பட்டியலின மக்கள், அவர்களுடைய மகன்கள் திருமணமாகி தனிக்குடித்தனம் செல்கின்றபோது, அரசே இடம் வாங்கி, அவர்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும்.

* 100 நாட்கள் வேலைவாய்ப்புத் திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும்:

100 நாட்கள் வேலைவாய்ப்புத் திட்டம் 125 நாட்களாக உயர்த்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. கிராமப்புறங்களின் வளர்ச்சிக்கான இத்திட்டம், 150 நாட்கள் வேலைவாய்ப்புத் திட்டமாக உயர்த்தப்படும்.

* அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டம்:

மகளிருக்கு ரூ. 25,000/- மானியத்துடன், 5 லட்சம் மகளிருக்கு அம்மா இருசக்கர வாகனங்கள் வழங்கப்படும்.

Tags : Edappadi Palanichami ,Chennai ,General Election ,17th Legislative Assembly ,Tamil Nadu ,All India Anna Dravitha Development Corporation ,
× RELATED மகாராஷ்டிராவில் 25 மாநகராட்சிகளை கைப்பற்றியது பாஜ