*போக்குவரத்து நெருக்கடி
பொன்னமராவதி : பொன்னமராவதியில் சாரல் மழை பெய்வதையும் பொருட்படுத்தாமல், பொங்கல் சந்தையில் மக்கள் கூட்டம் அலைமோதியது.பொன்னமராவதி பகுதியில் உள்ள மக்கள் பெரும்பாலும் விவசாயத்தை நம்பியே வாழ்கின்றனர்.
ஆயினும் போதிய மழை இல்லாமல் தங்களுக்கு தேவையான காய்களை இப்பகுதி விவசாயிகளே சாகுபடி செய்ய முடியவில்லை.
இதனால் புதுக்கோட்டை, திருச்சி, சிவகங்கை மாவட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள் பொன்னமராவதிக்கு சென்று தான் தங்களுக்கு தேவையான பொங்கல் பொருட்கள் வாங்க வேண்டும். இதனால் எப்போதும் பொன்னமராவதியில் கூட்டமாகவே காணப்படும்.
நேற்று அதிகாலை முதலே பொன்னமராவதியில் சாரல் மழை பெய்து வந்தது. சில மணி நேரங்களே மழை விட்டது. இருந்த போதிலும் பொன்னமராவதி பொங்கல் சந்தை மற்றும் கடைவீதிகளில் கூட்டம் மழையையும் பொருட்படுத்தாமல் அலை மோதியது.
குறிப்பாக அண்ணாசாலை மற்றும் சந்தை பகுதிக்கு செல்லும் சாலை நெருக்கடியாக காணப்பட்டது. கரும்பு, வாழைப்பழம், மஞ்சள், காய்கள் விற்பனை களைகட்டியது. கோலப்பொடி விற்பனை மந்தமாக காணப்பட்டதாக தெரிகிறது. நேற்றைய சந்தையில் மொச்சை, கத்தரி உள்ளிட்ட காய்கள் குறைவான விலையிலேயே விற்பனை செய்யப்பட்டது.
பொன்னமராவதியில் முக்கிய சாலையாக அண்ணாசாலை, மெயின்ரோடு பகுதியில், இதுவரை பேரிக்கேட் அமைத்து பொங்கல் சந்தைக்காக வந்த வாகனங்கள் அனைத்தும் மாற்று பாதையில் திருப்பி விடப்படும். ஆனால் நேற்று பேரிகேட் அமைக்கப்படவில்லை. இதனால் இந்த பகுதி போக்குவரத்து நெரிசலுடன் காணப்பட்டது.
