ராமநத்தத்தில் துணிகரம் பெயின்ட் கடையில் பணம், லேப்டாப் திருட்டு

திட்டக்குடி, ஜன. 27:  ராமநத்தத்தில் பெயின்ட் கடையின் பூட்டை உடைத்து 90 ஆயிரம் ரொக்க பணம், லேப்டாப் மற்றும் செல்போன் ஆகியவற்றை மர்ம ஆசாமிகள் திருடிச் சென்றனர். கடலூர் மாவட்டம் ராமநத்தம் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலை அருகே திருச்சி பகுதியை சேர்ந்த நிஷார்அஹமது (33) என்பவர்  செராமிக் என்ற பெயரில் பெயின்ட் மற்றும் டைல்ஸ் கடை நடத்தி வருகின்றார். இந்த கடையின் மேலாளர் சுரேஷ்குமார் (29) நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் கடையை மூடி விட்டு வீட்டுக்கு சென்றுவிட்டார். நேற்று காலை கடையை திறப்பதற்கு மேலாளர் சுரேஷ்குமார் வந்துள்ளார். அப்போது கடையின் முன்பக்க ஷட்டரில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டு கடை திறந்திருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது கடையில் வைக்கப்பட்டிருந்த 90 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம், 50 ஆயிரம் ரூபாய் மதிப்புடைய இரண்டு லேப்டாப் மற்றும் ஒரு செல்போன் திருட்டு போயிருந்தது தெரியவந்தது.  இதுகுறித்து ராமநத்தம் காவல் நிலையத்தில் சுரேஷ்குமார் புகார் அளித்தார்.

புகாரின் ராமநத்தம் சப்-இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்தனர். சப்-இன்ஸ்பெக்டர்கள் வினோத்குமார், சரண்யா ஆகியோர் தலைமையிலான கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். மேலும் கடலூரில் இருந்து குப்பர் என்ற மோப்பநாய் வரவழைக்கப்பட்டது நாய் தேசிய நெடுஞ்சாலை வழியாக ஓடி சிறிது தூரம் நின்றது. போலீசார் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர். இது குறித்து ராமநத்தம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தேசிய நெடுஞ்சாலையில் நடந்த திருட்டு சம்பவம் அப்பகுதி பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories:

>