×

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த வழக்கு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு ஆஜராக டெல்லி புறப்பட்டார் தவெக தலைவர் விஜய்

சென்னை: கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த வழக்கு தொடர்பாக இன்று நடைபெறவுள்ள விசாரணையில் ஆஜராக தவெக தலைவர் விஜய் டெல்லி புறப்பட்டார். சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் டெல்லி செல்லும் விஜய்க்கு, டெல்லி விமான நிலையத்தில் இருந்து அவர் செல்லும் இடங்களுக்கு காவல் துறை பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தவெக தலைவர் விஜய்க்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என டெல்லி காவல் துறை உறுதியளித்துள்ளது. டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் காலை 11 மணியளவில் விஜய் ஆஜராகிறார்

த.வெ.க. தலைவர் விஜய் கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ம் தேதி அன்று கரூரில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியானார்கள். இந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கை உச்சநீதிமன்றம் மேற்பார்வையில் சிபிஐ விசாரித்து வருகிறது. கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் சி.பி.ஐ. அதிகாரிகள் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள். அங்கு வைத்து புஸ்சி ஆனந்த், நிர்மல்குமார், ஆதவ் அர்ஜூனா, மதியழகன் உள்ளிட்ட நிர்வாகிகளிடம் கடந்த நவம்பர் மாதம் விசாரணை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து அவர்களுக்கு சம்மன் அனுப்பி டெல்லியில் உள்ள சி.பி.ஐ. தலைமை அலுவலகத்திலும் கடந்த மாதம் 3 நாட்கள் விசாரணை நடத்தப்பட்டது.

கரூர் சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையில் விஜய்யின் பெயர் இல்லை. எனினும் அவரிடமும் விசாரணை நடத்துவதற்கு அதிகாரிகள் முடிவு செய்தனர். இந்தநிலையில் விசாரணையின் தொடர்ச்சியாக த.வெ.க. தலைவர் விஜயையும் நேரில் அழைத்து விசாரிக்க சி.பி.ஐ. முடிவு செய்து அவருக்கு சம்மன் அனுப்பியது. இன்று டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் காலை 11 மணிக்கு அவர் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது. இந்த சம்மனை ஏற்று சிபிஐ முன் ஆஜர் ஆவதற்காக விஜய் இன்று காலை 6 மண்யளவில் தனது பனையூர் வீட்டில் இருந்து டெல்லி புறப்பட்டார். தனி விமானத்தில் விஜய் டெல்லி செல்கிறார்.

Tags : Dweka ,Vijay ,Delhi ,CPI ,Karur ,Chennai ,Chief of Staff ,Delhi Airport ,
× RELATED ஈரான் முதல் முறையாக ஸ்டார்லிங்க் இணையதளத்தை முடக்கியுள்ளது