நெல்லை, ஜன. 12: நெல்லை மாவட்டம் களக்காடு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் விடிய விடிய மிதமான மழை பெய்து வருகிறது. இதனால் களக்காடு தலையணையில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. தடுப்பணையை மூழ்கடித்தபடி நீர் பாய்ந்தோடுகிறது. இதனால் பாதுகாப்பு கருதி தலையணையில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் நேற்று முதல் தடை விதித்தனர். அதே நேரத்தில் தலையணையை சுற்றி பார்க்க அனுமதி வழங்கப்பட்டு வருவதாக வனசரகர் பிரபாகரன் அறிவித்துள்ளார்.
நேற்று விடுமுறை தினம் என்பதால் தலையணையில் குளிப்பதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த சுற்றுலா பயணிகள் குளிக்க விதிக்கப்பட்ட தடையால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
