திருவள்ளூர், ஜன.12: திருவள்ளூர் மாவட்டம், திருநின்றவூர் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் தங்களது வீடுகளில் சேகரமாகும் குப்பைகளை நகராட்சி பகுதியில் உள்ள காலிமனைகளில் கொட்டுவதும், தங்களது வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரினை, வீடுகளுக்குள்ளயே கழிவுநீர் தொட்டியினை அமைக்காமல் தெருவில் விடுவதும் பொது சுகாதார சட்டத்தின்படி குற்றமாகும்.
காலிமனைகளை உரிமையாளர்களே தூய்மையாக வைத்திருக்க வேண்டும், மீறினால் அந்தந்த காலி மனைகளின் உரிமையாளர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், தெருக்களில் கழிவு நீரை விடுபவர்களுக்கு முதல் தடவை ரூ.1000 அபராதமும், தொடர்ந்து தெருக்களில் கழிவு நீரை விடுபவர்களுக்கு ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து வசூலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
