×

டிரம்ப் தாக்குதல் நடத்தினால் அமெரிக்கா, இஸ்ரேலுக்கு பதிலடி: ஈரான் கடும் எச்சரிக்கை

துபாய்: ஈரானில் பணவீக்கம் அதிகரித்து மக்களின் வாழ்க்கைச் செலவு அதிகரித்ததால் ஆத்திரமடைந்துள்ள மக்கள், கடந்த மாதம் 28ம் தேதி போராட்டங்கள் தொடங்கின. இது அரசுக்கு எதிரான போராட்டமாக மாறியுள்ளது.தலைநகர் தெஹ்ரான், நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான மாஷாத் உள்பட நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. 1979ம் ஆண்டு நாட்டில் இஸ்லாமிய புரட்சி நடைபெற்றது முதல், மதகுருக்கள் ஆட்சி செய்து வரும் மரபை முடிவுக்குக் கொண்டு வரவேண்டும் என்ற குரல்களும் அங்கு வலுக்க தொடங்கியுள்ளன.

இந்த போராட்டங்களின் போது பாதுகாப்பு படையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே நடந்த மோதல்களில் பலியானோர் எண்ணிக்கை 116 ஆக அதிகரித்துள்ளது. 2,600 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஈரானில் அரசுக்கு எதிராக போராடும் போராட்டக்காரர்களுக்கு உதவத் தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். ஈரான் விவகாரத்தில் தலையிடுவது குறித்து அதிபர் டிரம்ப் மிரட்டல் விடுத்த நிலையில் ஈரான் நாடாளுமன்ற கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டம் குறித்த செய்தியை ஈரான் தொலைக்காட்சி ஒளிபரப்பியது. கூட்டத்தின் போது அந்த நாட்டு எம்பிக்கள் அமெரிக்காவுக்கு மரணம் என்று கூச்சலிட்டனர்.

நாடாளுமன்ற சபாநாயகர் காலிபாப் பேசும் போது, போராட்டங்களில் கலந்து கொள்ளும் போராட்டக்காரர்கள் மீது உறுதியான நடவடிக்கை எடுத்து வரும் பாதுகாப்பு படையினருக்கு பாராட்டு தெரிவிப்பதாக கூறினார். மேலும் அமெரிக்கா இஸ்லாமிய குடியரசைத் தாக்கினால், அமெரிக்க ராணுவமும் இஸ்ரேலும் ”சட்டபூர்வமான இலக்குகளாக” இருக்கும் என்று எச்சரித்தார். இதனிடையே, நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை அமெரிக்க அரசு அதிகாரிகளை மேற்கோள் காட்டி வெளியிட்டுள்ள செய்தியில், ஈரான் மீதான ராணுவ தாக்குதல் நடத்துவது குறித்து அதிபர் டிரம்ப் இன்னமும் இறுதி முடிவை எடுக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளன.

Tags : US ,Israel ,Trump ,Iran ,Dubai ,Tehran ,Mashhad ,
× RELATED அமெரிக்க பெண் கொல்லப்பட்ட விவகாரம்;...