சோம்நாத்: குஜராத்திற்கு 3 நாள் பயணமாக சென்றுள்ள பிரதமர் மோடி நேற்று வெராவல் நகரின் பிரபாஸ் படான் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற சோம்நாத் கோயிலுக்கு சென்றார். சோம்நாத் கோயில் மீது 1026ம் ஆண்டு முகலாய மன்னர் கஜினி முகமது முதல் முறையாக தாக்குதல் நடத்தினார். அதன் பின் பலமுறை இக்கோயில் அந்நிய படையெப்பாளர்களால் சேதப்படுத்தப்பட்டு புனரமைக்கப்பட்டது. இக்கோயில் முதல் முறையாக தாக்கப்பட்டு 1000 ஆண்டுகளுக்குப் பிறகும் நிலைத்து நிற்பதை கொண்டாடும் வகையில் சோம்நாத் சுயமரியாதை திருவிழா நடத்தப்பட்டது.
இதன் நிறைவு விழாவான நேற்று பிரதமர் மோடி சிறப்பு பூஜையில் பங்கேற்றார். மேலும், கோயில் தாக்கப்பட்ட போது அதை எதிர்த்து உயிர் தியாகம் செய்தவர்களை நினைவு கூறும் வகையில் சவுரியா யாத்திரையிலும் பிரதமர் மோடி பங்கேற்றார். இதில் 108 குதிரைகள் ஊர்வலத்தை மேளம் அடித்து மோடி தொடங்கி வைத்தார்.
பின்னர் சுயமரியாதை விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது:
சோம்நாத்தின் வரலாறுதான் இந்தியாவின் வரலாறு. இந்த கோயிலைப் போலவே, அந்நியப் படையெடுப்பாளர்கள் இந்தியாவை பலமுறை அழிக்க முயன்றனர். கோயிலை அழித்துவிட்டதால் தாங்கள் வெற்றி பெற்றுவிட்டதாக நினைத்தார்கள். ஆனால் 1,000 ஆண்டுகளுக்குப் பிறகும் சோமநாதரின் கொடி இன்றும் உயரமாகப் பறக்கிறது.
வெறுப்பு, அட்டூழியம் மற்றும் தீவிரவாதத்தின் உண்மையான வரலாறு நம்மிடமிருந்து மறைக்கப்பட்டது. வெறும் பொருளுக்காக நடந்த தாக்குதல் என்றால் ஒருமுறை நடத்தியிருந்தால் போதும். ஆனால் சோம்நாத் கோயில் மீது வெவ்வேறு காலகட்டங்களில் தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. ஆனால், அந்தத் தாக்குதல் கோயிலைக் கொள்ளையடிக்கும் முயற்சி என நமக்கு கற்பிக்கப்பட்டது.
சுதந்திரத்திற்குப் பிறகு, சர்தார் வல்லபாய் படேல் சோம்நாத் கோயிலை மீண்டும் கட்டியெழுப்ப முயன்ற போது, அவருக்கு தடைகள் ஏற்படுத்தப்பட்டன. சமாதானப்படுத்தும் கொள்கையில் ஈடுபட்டவர்கள், தீவிரவாத மனப்பான்மை கொண்ட நபர்களுக்கு முன்னால் மண்டியிட்டனர். சோம்நாத் கோயிலை மீண்டும் கட்டியெழுப்புவதைத் தடுக்க முயன்ற அந்த சக்திகள் இன்றும் நம்மிடையே இருக்கின்றன. அத்தகைய சக்திகளைத் தோற்கடிக்க நாம் விழிப்புடனும், ஒற்றுமையுடனும், வலிமையுடனும் இருக்க வேண்டும்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
ஜெர்மனி அதிபருடன் மோடி இன்று சந்திப்பு
ஜெர்மனி அதிபர் பிரெட்ரிக் மெர்ஸ் 2 நாள் பயணமாக இன்று இந்தியா வருகிறார். அவர், அகமதாபாத்தில் பிரதமர் மோடியை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இதில் வர்த்தகம், முதலீடு, முக்கிய தொழில்நுட்பங்கள், பாதுகாப்பு ஆகிய துறைகளில் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அகமதாபாத்தில் நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு மெர்ஸ் பெங்களூரு செல்கிறார். இந்திய இறக்குமதி பொருட்களுக்கு அமெரிக்கா 50 சதவீத வரி விதித்ததுடன் அடுத்ததாக 500 சதவீத வரி விதிப்பதாக மிரட்டும் நிலையில், ஐரோப்பாவில் இந்திய வர்த்தக கூட்டாளிகளில் முக்கிய நாடான ஜெர்மனி அதிபரை பிரதமர் மோடி சந்திக்க இருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
