- காங்கிரஸ் எம். எல்.
- திருவனந்தபுரம்
- பாலக்காட் காங்கிரஸ்
- ராகுல் மங்கூட்டில்
- ராகுல் மங்கோட்டம்
- கேரள மாநிலம் பாலக்காடு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.
திருவனந்தபுரம்: திருமணம் செய்வதாக கூறி இளம்பெண்ணை பலாத்காரம் செய்ததாக கூறப்பட்ட புகாரில் பாலக்காடு காங்கிரஸ் எம்எல்ஏ ராகுல் மாங்கூட்டத்திலை இன்று அதிகாலை போலீசார் கைது செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் பாலக்காடு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவாக இருப்பவர் ராகுல் மாங்கூட்டத்தில். இவர் மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவராகவும் இருந்தார். இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு ராகுல் மாங்கூட்டத்தில் தன்னை பலாத்காரம் செய்து கருச்சிதைவு செய்ய மிரட்டியதாக கூறி ஒரு இளம்பெண்ணின் ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியானது பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக எம்எல்ஏ மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் ராகுல் மாங்கூட்டத்திலுக்கு ஜாமீன் கிடைத்தது. இதற்கிடையே இளைஞர் காங்கிரஸ் மாநில தலைவர் பதவியில் இருந்து அவர் நீக்கப்பட்டார். இந்த நிலையில் மேலும் ஒரு இளம்பெண் இவர் மீது பலாத்கார புகார் கொடுத்தார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதன் பிறகு 3வதாக பத்தனம்திட்டாவை சேர்ந்த ஒரு இளம்பெண் ராகுல் மாங்கூட்டத்திலுக்கு எதிராக ஒரு பலாத்கார புகார் கொடுத்தார்.
தற்போது வெளிநாட்டில் வசிக்கும் இவர் போலீசில் அளித்த புகாரில் திருமணம் செய்வதாக கூறி என்னை பலாத்காரம் செய்ததோடு, கருவையும் கலைக்கச் சொல்லி சித்ரவதை செய்தார் என்று கூறியிருந்தார்.இது தொடர்பாக கேரள குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். வெளிநாட்டில் வசிக்கும் அந்த இளம்பெண்ணிடம் காணொலி மூலம் போலீசார் விவரங்களை சேகரித்தனர்.இந்த நிலையில் இன்று அதிகாலை 1 மணியளவில் குற்றப்பிரிவு போலீசார் பாலக்காட்டில் ஒரு ஓட்டலில் தங்கியிருந்த ராகுல் மாங்கூட்டத்திலை அதிரடியாக கைது செய்தனர். இதன்பின் போலீசார் அவரை விசாரணைக்காக பத்தனம்திட்டா ஆயுதப்படை முகாமுக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரிடம் தனிப்படை எஸ்பி பூங்குழலி தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணைக்கு பின் ராகுல் மாங்கூட்டத்திலை போலீசார் திருவல்லா மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்த திட்டமிட்டுள்ளனர். பலாத்கார வழக்கில் காங்கிரஸ் எம்எல்ஏ கைது செய்யப்பட்டுள்ளது கேரள அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
