- கல்குவாரி
- பெரம்பலூர்
- பட்டலூர்
- அலத்தூர் தாலுகா செட்டிகுளு
- செட்டிகுளம்
- அலத்தூர் தாலுகா நடர்மங்கல
- பெரம்பலூர் மாவட்டம்
- கல்வாரி
பாடாலூர்: ஆலத்தூர் தாலுகா செட்டிகுளத்தில் கல்குவாரியில் மண் சரிந்து விழுந்ததில் கூலி தொழிலாளி ஒருவர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தார். பெரம்பலுர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா நாட்டார்மங்கலத்தை அடுத்த செட்டிகுளம் கிராமத்தில் தனியார் கல்குவாரி உள்ளது. இந்த கல்குவாரியில் நேற்று மாலை வெடி வைக்கும் பணிகள் நடந்தது. இதில் கல்குவாரி வேலை செய்யும் பணியாளர் பரத் மற்றும் கூலி தொழிலாளியான திருச்சி மாவட்டம் முசிறி தாலுகா கோதூர்பட்டியை சேர்ந்த ராமதாஸ் மகன் சக்கரவர்த்தி (45) உள்பட 2 பேர் ஈடுபட்டிருந்தனர்.
இன்று மாலை 5.30 மணிக்கு வெடி வைத்து பாறைகள் தகர்க்கப்பட்டது. அதன் பின்னர் வெடிப்பதற்கு பயன்படுத்திய கம்பிகளை சுற்றும் பணிகள் நடந்தது. இதில் பரத், சக்கரவர்த்தி ஆகியோர் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென்று கல்குவாரியில் மண் சரிவு ஏற்பட்டது. இதில் பரத் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். சக்கரவர்த்தி மண் சரிவில் சிக்கி கொண்டு உயிரிழந்தார்.
இதுகுறித்து பாடாலூர் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. விரைந்து வந்த போலீஸார் சம்பவ இடத்தை ஆய்வு செய்தனர். இதற்கிடையில் தகவல் அறிந்து மாவட்ட ஆட்சியர் மிருணாளினி, எஸ்பி ஜி.எஸ்.அனிதா, டி.எஸ்.பி. ஆனந்தி மற்றும் வருவாய் துறையினர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
மேலும் சம்பவ இடத்திற்கு ராட்சத பொக்லைன் வாகனம் வரவழைத்து உடலை தேடும் பணிகள் நடந்து வருகிறது. இன்று உடல் மீட்கப்படவில்லை என்றால் நாளையும் பணிகள் தொடரும் என்று கூறப்படுகிறது. இதற்கிடையில் வெடி விபத்து சம்பவம் பல்வேறு சர்ச்சைகளையும், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் வெடி பொருட்களுக்கு தடை விதிக்கப்படுமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. அதே நேரம் கல்குவாரி முறையான அனுமதி கொண்டு செயல்படுகிறதா, வெடி மருந்து முறையாக பெறப்பட்டுள்ளதா என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் மிருணாளினி கூறுகையில், செட்டிகுளம் கிராமத்தில் கல்குவாரியில் வெடி வைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த சக்கரவர்த்தி என்பவர் மண் சரிவில் சிக்கி உயிரிழந்தார். அவரை மீட்கும் பணிகளில் தீயணைப்பு படையினர், போலீஸார் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வெடி மருந்து எப்படி கிடைத்தது. முறையான அனுமதி பெறப்பட்டுள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தி அறிக்கை அளிக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். அவர்கள் அறிக்கை அளித்ததும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
