×

கோவையில் வாலிபர் அடித்து கொலை உறவினர் கொலைக்கு பழிக்கு பழி வாங்கிய நண்பர்கள் 2 பேர் கைது

*பரபரப்பு தகவல்கள்

கோவை : கோவை செல்வபுரம் அடுத்த கெம்பட்டி காலனியை சேர்ந்தவர் கோகுல கிருஷ்ணன் (30). இவர், செட்டிவீதியில் உள்ள நகைப்பட்டறையில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். இவர், கடந்த 2024ம் ஆண்டு செப்டம்பர் 7ம் தேதி தனது அண்ணனின் திருமண நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை குடும்பத்தினருடன் செய்து கொண்டு இருந்தனர்.

அன்று இரவு கோகுல கிருஷ்ணன் தனது நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தி உள்ளார். அதன்பின், மது போதையில் கோகுல கிருஷ்ணன் மற்றும் அவரது நண்பர்கள் செல்வபுரம் அசோக் நகர், பாலாஜி அவன்யூ பகுதியில் நடந்து சென்றனர்.

அப்போது, அங்கிருந்த கோகுல கிருஷ்ணனின் உறவினர் ஜப்பான் என்கிற பிரவீன்குமாரிடம், தகராறில் ஈடுபட்டு தாக்கி உள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த பிரவீன் குமார் அங்கிருந்து சென்று தனது நண்பர்களை அழைத்து வந்தார்.

அவர்கள் கோகுல கிருஷ்ணனை தட்டி கேட்டனர். இதனால் இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அதில் ஆத்திரம் அடைந்த பிரவீன்குமார் மற்றும் அவரது நண்பர்கள் தாங்கள் வைத்திருந்த கத்தியை எடுத்து கோகுல கிருஷ்ணனை சரமாரியாக குத்தி கொலை செய்தனர்.

இதுகுறித்து செல்வபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து செல்வபுரம் கெம்பட்டி காலனியை சேர்ந்த ஜப்பான் என்கிற பிரவீன்குமார் (20), நாகராஜ் (27), அவரது தம்பிகள் சந்துரு (25), சூரியா (26) மற்றும் சஞ்சய், (25) ஆகிய 5 பேரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

இதில் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த ஜப்பான் என்ற பிரவீன்குமார் மைசூர் சென்று அங்கு தென்னை நார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இந்த நிலையில், நேற்று முன்தினம் கோர்ட்டில் ஆஜராக பிரவீன்குமார் கோவை வந்துள்ளார். பின்னர், இரவு நண்பர்கள் சிலருடன் கெம்பட்டி காலனி அசோக் அவென்யூ, பாலாஜி நகர் பகுதியில் உள்ள முட்புதர் பகுதியில் மது குடித்துக் கொண்டு இருந்தார்.

அப்போது அங்கு வந்த 2 வாலிபர்கள் பிரவீன்குமாரிடம், எங்களது நண்பரை கொலை செய்து விட்டு நீ மட்டும் சந்தோசமாக இருக்கிறாயா? என கேட்டு தகராறில் ஈடுபட்டனர்.

இதில் ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர்கள் மதுபோதையில் இருந்த பிரவீன்குமாரை கை மற்றும் கல்லால் சரமாரியாக தாக்கினர். பலத்த காயம் அடைந்த பிரவீன்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதன் பின்னர் அந்த வாலிபர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர்.

இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து கொலையாளிகள் குறித்து விசாரணை நடத்தி வந்தனர்.அதில் பிரவீன்குமாரை கொலை செய்தது கோகுல கிருஷ்ணனின் நண்பர்கள் மனோஷ் (27), மற்றும் கண்ணன் (25) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் தலைமறைவான 2 பேரையும் பிடிக்க 2 தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வந்த நிலையில், அவர்களை போலீசார் நேற்று மடக்கி பிடித்து கைது செய்தனர்.

போலீசாரை பார்த்து தப்ப முயன்ற போது கால் முறிந்ததால், இருவரும் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், “கோகுல கிருஷ்ணனும், பிரவீன்குமாரும் உறவினர்கள். ஒரே பகுதியை சேர்ந்தவர்கள். கடந்த 2024ம் ஆண்டு கோகுல கிருஷ்ணன் வீட்டில் டி.வி.,யை அதிக சத்தமாக வைத்து பார்த்துள்ளார்.

இதனை பிரவீன்குமார் கண்டித்துள்ளார். இதனால் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது. இதனால் கோகுல கிருஷ்ணனை பழி தீர்க்க பிரவீன்குமார், அவரை கத்தியால் குத்தி கொலை செய்தார். தற்போது பழிக்கு பழி வாங்க கோகுல கிருஷ்ணனின் நண்பர்கள் காத்திருந்து பிரவீன்குமாரை அடித்து கொலை செய்துள்ளனர்” என்றனர்.

ஒரே இடத்தில் கொலை

செல்வபுரம் கெம்பட்டி காலனி அசோக் அவென்யூ, பாலாஜி நகர் பகுதியில் கடந்த 2024ம் ஆண்டு கோகுலகிருஷ்ணன் கொலை நடந்த அதே இடத்தில் நேற்று முன்தினம் அவரது நண்பர்கள் இருவர் பிரவீன்குமாரை கொலை செய்து பழி தீர்த்துள்ளனர்.

Tags : Goa ,Govai ,Gokula Krishnan ,Kempatti Colony ,Kowai Selvapura ,Setiviedi ,
× RELATED ரூ.30 கோடி கடன் வாங்கி தருவதாக கூறி ரூ.77...