×

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் வேகம் 10 கி.மீ. ஆக குறைந்தது: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

 

சென்னை: ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் வேகம் 10 கிலோ மீட்டராக குறைந்துள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நேற்று இரவு 15 கி.மீ. வேகத்தில் நகர்ந்த நிலையில் தற்போது 10 கி.மீ. வேகத்தில் நகர்கிறது; சென்னைக்கு 800 கி.மீ., காரைக்காலுக்கு 630 கி.மீ. தொலைவில் நிலைகொண்டுள்ளது தாழ்வு மண்டலம்; ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் இன்று இலங்கையில் கரையை கடக்கிறது.

தென்கிழக்கு வங்கக்கடல் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று காலை 8.30 மணி அளவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று அதே பகுதிகளில், மட்டகிளப்பிற்கு (இலங்கை) கிழக்கு – தென்கிழக்கே சுமார் 790 கிலோ மீட்டர் தொலைவிலும், திரிகோணமலைக்கு (இலங்கை) கிழக்கு – தென்கிழக்கே 880 கிலோ மீட்டர் தொலைவிலும், காரைக்காலுக்கு தென்கிழக்கே 1150 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னைக்கு தெற்கு-தென்கிழக்கே 1270 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலைக்கொண்டிருந்தது.

இந்நிலையில் இது இன்று மணிக்கு 15 கி.மீ வேகத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதாகவும், அடுத்த 24 மணி நேரத்தில், இது தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என்றும், காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதனிடையே தமிழ்நாட்டில் ஜன.9, 10 ஆகிய தேதிகளில் 12 செ.மீ முதல் 20 செ.மீ வரை மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதால் இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் இன்று முதல் அடுத்த 4 நாட்கள் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

Tags : India Meteorological Department ,Chennai ,
× RELATED வேலூரில் தினகரன் – விஐடி இணைந்து...