செங்கல்பட்டு: டிரையத்லான் விளையாட்டு போட்டி காரணமாக கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது என கலெக்டர் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் சினேகா விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: செங்கல்பட்டு மாவட்டத்தில் டிரையத்லான் என்ற விளையாட்டு போட்டி 11ம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதனை முன்னிட்டு நாளை இரவு 11 மணி முதல் 11ம் தேதி மதியம் 2 மணி வரை, சென்னை – புதுச்சேடி மார்க்கமாக உள்ள கிழக்கு கடற்கரைச் சாலை NH-332-A கோவளம் சந்திப்பிலிருந்து சூளேரிக்காடு (நெம்மேலி) வரை போக்குவரத்திற்காக முழுவதுமாக மூடப்படும். மேலும் இவ்வழி தடத்திலேயே போட்டியானது இருவழி பாதையாக நடத்தப்பட உள்ளது. எனவே, புதுச்சேரியிலிருந்து சென்னை நோக்கி வரும் அனைத்து கனரக வாகனங்களும், பூஞ்சேரி ஆலத்தூர் பைபாஸ் (OMR) கேளம்பாக்கம் -சென்னை வழியாக செல்லும்படி அறிவுறுத்தப்படுகிறது.
ஆலத்தூர் பைபாஸ்-பேரூர் சந்திப்பு வழியாக கிழக்கு கடற்கரை சாலையை அணுகும் இணைப்பு சாலை முழுவதுமாக மூடப்படும். புதுச்சேரி சென்னை மார்க்கமாக உள்ள கிழக்கு கடற்கரை சாலையில் இலகுரக வாகனங்கள் இரு வழி தடங்களாக குறிப்பிட்ட நேரம் வரை பூஞ்சேரி கோவளம் வழியாக அனுமதிக்கப்படும். இவ்வாறு கூறியுள்ளார்.
