×

18 வயது கீழ் உள்ளவர்களுக்கு மது விற்பனையா? அதிகாரிகளுக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: தேனி மாவட்டம், உத்தமபுரத்தைச் சேர்ந்த கவுதம், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: மது வீட்டிற்கும், நாட்டிற்கும் கேடு என மதுபான பாட்டிலில் அச்சிடப்பட்டிருந்தாலும், பலரை அடிமையாக்கி வாழ்வை சீர்குலைக்கிறது. பெண்களுக்கு எதிரான வன்முறை மட்டுமன்றி கொலை, கொள்ளை, விபத்து, தற்கொலைகள் அதிகரிக்கின்றன. படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என அரசியல் கட்சிகள் தேர்தல் வாக்குறுதி அளிக்கின்றன. 18 வயதுக்கு மேலானவர்கள் (மது அருந்த உரிமம் பெற்ற நுகர்வோர்) மட்டுமே இந்திய தயாரிப்பு வெளிநாட்டு மதுபானங்களை வாங்க அனுமதிக்கப்பட வேண்டும் என டாஸ்மாக் நிறுவனத்திற்கு அறிவுறுத்துமாறு மாநில அரசுக்கு உயர்நீதிமன்ற கிளை 2023ல் உத்தரவிட்டது.

மற்றொரு வழக்கில், தமிழ்நாடு மதுவிலக்கு சட்டத்தின் குறிப்பிட்ட பிரிவுகள் பொது இடங்களில் மது அருந்துவதை தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கின்றன என சென்னை உயர்நீதிமன்றம் 2023ல் பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளது. மது அருந்த உரிமம் இல்லாத (18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள்) நுகர்வோருக்கு மதுபானங்களை விற்பது, சட்ட மீறலாகும். மது அருந்த உரிமம் இல்லாதவர்களுக்கு மது விற்பனை செய்யக்கூடாது என உத்தரவிட வேண்டும்.இவ்வாறு கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, மனுவை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

Tags : High Court ,Madurai ,Gautham ,Utthamapuram, Theni district ,
× RELATED கரூர் நெரிசலில் 41 பேர் பலியான இடத்தில்...