×

உயர் பாதுகாப்பு ரூபாய் நோட்டு அச்சடிக்க ரூ.1,800 கோடி திட்டம்: ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்

புதுடெல்லி: ரூபாய் நோட்டுகளுக்கான உயர் பாதுகாப்பு கொண்ட தாள்களின் உற்பத்தியை அதிகரிக்க ரூ.1,800 கோடியிலான திட்டத்திற்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நேற்று முன்தினம் நடந்த பொருளாதார விவகாரங்களுக்கான ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக ஊடகங்களில் தகவல் வெளியாகி உள்ளது.

இந்த திட்டம், உயர் பாதுகாப்பு தாள்களுக்காக இந்தியா இறக்குமதியை சார்ந்திருப்பதை குறைக்கும் என அரசு தரப்பில் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாள் மத்தியபிரதேசத்தின் நர்மதாபுரத்தில் உள்ள பாதுகாப்பு தாள் அச்சிடும் ஆலையில் தயாரிக்கப்படும். மேலும் இந்த திட்டத்தின் கீழ், மபி அச்சாலையில் புதிய சிலிண்டர் மோல்டு வார்ட்டர்மார்க் ரூபாய் நோட்டு உற்பத்தி பிரிவும் ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது ஆண்டுதோறும் 6000 டன் உயர்தர மற்றும் நீடித்து உழைக்கக்கூடிய பாதுகாப்பு தாள்களை உற்பத்தி செய்யும். இந்த சிறப்பு தாள்கள், ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதற்கு மட்டுமின்றி, நீதித்துறை அல்லாத முத்திரை தாள்கள் மற்றும் பாஸ்போர்ட் அச்சிடுவதற்கும் பயன்படுத்தப்படும். இந்த பாதுகாப்பு தாள் அச்சாலை, செக்யூரிட்டி பிரிண்டிங் அண்ட் மிண்டிங் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் கீழ் செயல்படுகிறது.

இது நாட்டில் ரூபாய் நோட்டு தாள் உற்பத்தியில் ஏகபோக உரிமையை கொண்டுள்ளது. பொருளாதார வளர்ச்சி மற்றும் டிஜிட்டல் பணப்பரிமாற்றங்கள் அதிகரித்த போதிலும் ரூபாய் நோட்டுகளின் பயன்பாடு அதிகரித்து வருவதால், அதன் தேவை தொடர்ந்து வளர்ந்து வருகிறது. இது இந்த மேம்படுத்தலை அவசியமாக்குகிறது. உயர் பாதுகாப்பு தாளில் வாட்டர்மார்க், பாதுகாப்பு இழைகள் மற்றும் சிறப்பு இழைகள் போன்ற அம்சங்கள் உள்ளன. இவை கள்ள நோட்டுகளைத் தடுப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

Tags : Union Cabinet ,New Delhi ,Modi ,Delhi ,
× RELATED மம்தா பானர்ஜி பெண் புலி: அவர் திறம்பட...