×

ஆர்.கே.பேட்டையில் நலன் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்

ஆர்.கே.பேட்டை, ஜன.9: ஆர்.கே.பேட்டை அடுத்துள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில், தமிழக அரசின் நலன் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் நேற்று நடந்தது. ஆர்.கே.பேட்டை வட்டார மருத்துவ அலுவலர் (பொறுப்பு) ரேவதி முன்னிலை வகித்தார். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் வெங்கடேசன் வரவேற்றார். மாவட்ட சுகாதார அலுவலர் பிரியாராஜ் தலைமை தாங்கி, நலன் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமினை, குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்து, பார்வையிட்டார். முகாமில், பொது மருத்துவம், இருதயம், எலும்பு, நரம்பியல், தோல், காது – மூக்கு தொண்டை மருத்துவம், மகப்பேறு மருத்துவம், இயன்முறை மருத்துவம், பல் மருத்துவம், கண் மருத்துவம், மன அழுத்த மருத்துவம், குழந்தைகள் நல மருத்துவம், நுரையீரல் மருத்துவம், நீரிழிவு நோய் மருத்துவம், பொது அறுவை சிகிச்சை மற்றும் சித்த மருத்துவம் உள்ளிட்டவை இடம் பெற்றிருந்தன. இதில் வங்கனூர், செல்லாத்தூர், கிருஷ்ணாகுப்பம், ஆர்.கே.பேடடை, விளக்கணாம்பூண்டி புதூர், வெள்ளாத்தூர் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராம மக்களை சேர்ந்த 1,342க்கும் மேற்பட்டோருக்கு மருத்துவ பரிசோதனை செய்து, மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டு, பயனடைந்துள்ளனர். இம்முகாமில், ஆர்.கே.பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் மெல்கிராஜாசிங், சுகாதார ஆய்வாளர்கள் சலீம் பாஷா, பொன்னம்பலம், யோகேஷ், மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் மற்றும் செவிலியர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Tags : R. K. Stalin ,R. K. Hood ,Tamil Nadu government ,R. K. Beti ,Regional Medical Officer ,Revathi ,Venkatesan ,. District ,
× RELATED ஆவடி மாநகராட்சி சார்பில் புகையில்லா போகி பண்டிகை