×

நான் அமைப்பதே பாமக கூட்டணி; அன்புமணியுடன் கூட்டணி பேசியது நீதிமன்ற அவமதிப்பு: ராமதாஸ் பரபரப்பு பேட்டி

 

விழுப்புரம்: அன்புமணியுடன் கூட்டணி பேசியது நீதிமன்ற அவமதிப்பு என ராமதாஸ் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பாமக தந்தை, மகன் என இரு அணியாக பிரிந்து தேர்தலை சந்திக்கிறது. இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், பாமக தலைவர் அன்புமணி, சென்னை பசுமை சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் இல்லத்திற்கு சென்று அவருடன் நேரடியாக சந்திப்பு நடத்தினார். இதில், பாமக தலைவர் அன்புமணி, அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாமக இணைவதாக அறிவித்தார். இந்நிலையில் இது குறித்து தைலாபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ்; ஒரு நபர் ஒரு கட்சியோடு பேசி கூட்டணி அமைத்துள்ளார்.

அன்புமணி கூட்டணி ஒப்பந்தம் போட்டாரா, கையெழுத்து போட்டாரா என்பது எனக்குத் தெரியாது. நான் ஆரம்பித்த கட்சியை யாரும் உரிமை கொண்டாட தகுதியில்லை. அன்புமணி எனக்கு வேட்டு வைப்பார் என்று எனக்கு முன்பே தெரியவில்லை. இந்திய அளவில் அங்கீகாரம் பெறும் அளவுக்கு பாமகவை வளர்த்திருக்கிறேன். கடும் எதிர்ப்பை மீறித்தான் அன்புமணியை கட்சியில் சேர்த்து ஒன்றிய அமைச்சராக்கினேன். அன்புமணி செய்த தில்லுமுல்லு காரணமாகவே பாமகவில் இருந்து நீக்கினேன். பாமக என்னிடம்தான் உள்ளது. பாமக தொண்டர்கள் என்னுடன்தான் இருக்கிறார்கள். நான் பாசத்தோடு வளர்த்த சிலர், கார் மற்றும் பணம் கொடுப்பார்கள் என்று அன்புமணியிடம் சென்றுவிட்டனர்.

சிலர் மட்டும் பணம், பதவிக்காக அன்புமணியிடம் சென்றுள்ளனர். பணம் கொடுப்பார் என்பதற்காக அன்புமணியுடன் படம் எடுத்துக்கொள்கிறார்கள். அன்புமணி நிறுத்தும் வேட்பாளருக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள். தந்தைக்கே துரோகம் செய்த அன்புமணி கும்பலுக்கா என மக்கள் நினைப்பார்கள். அன்புமணியுடன் எடப்பாடி பழனிசாமி கூட்டணி பேசியது நீதிமன்ற அவமதிப்பு, என் தலைமையில்தான் கூட்டணி பேச முடியும். நான் அமைப்பதே பாமக கூட்டணி, நான் சேரும் கூட்டணிதான் ஆட்சி அமைக்கும் என்று கூறினார்.

Tags : Bhamaka alliance ,Anbumani ,Ramdas ,Viluppuram ,Tamil Nadu ,Bamaka ,
× RELATED சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அதிமுக...