×

இது ஐபிஎல் கிரிக்கெட் கிடையாது மதுரை ஜல்லிக்கட்டு போட்டிகளை அரசே ஏற்று நடத்த வேண்டும்: ஐகோர்ட் கிளை நீதிபதிகள் கருத்து

மதுரை: ‘ஜல்லிக்கட்டு போட்டி என்பது ஐபிஎல் கிரிக்கெட் விளையாட்டு கிடையாது. மதுரை ஜல்லிக்கட்டு போட்டிகளை அரசே ஏற்று நடத்த வேண்டும்’ என்று ஐகோர்ட் கிளை கூறியுள்ளது. மதுரை அவனியாபுரத்தை சேர்ந்த முருகன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: மதுரை மாவட்டத்தில் தை பொங்கலை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுகிறது. அவனியாபுரத்தில் தை முதல் நாள் (ஜன.15) ஜல்லிக்கட்டு விழா நடைபெறும். கடந்த 2017ம் ஆண்டு உச்சநீதிமன்றம் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த அனுமதியளித்த பின்னர், கடந்த 2018ம் ஆண்டு அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விழாவினை தென்கால் கண்மாய் பாசன விவசாயிகள் பிரதான ஜல்லிக்கட்டு சங்கம் என்ற அமைப்பின் பெயரால் குறிப்பிட்ட சிலர் மட்டும் ஜல்லிக்கட்டு விழாவினை நடத்தினர். இதற்கு ஆட்சேபம் தெரிவித்து ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் மாவட்ட நிர்வாகம் ஜல்லிக்கட்டு விழாவை நடத்தவும், அதில் 16 பேர் கொண்ட ஆலோசனை குழு அமைத்து நடத்தவும் உத்தரவிட்டது.

இதைத்தொடர்ந்து அவனியாபுரம் ஜல்லிக்கட்டை மாவட்ட நிர்வாகம் நடத்தி வருகிறது. எனவே, வரும் 15ம் தேதி நடக்கும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விழாவை நடத்த, அவனியாபுரம் கிராமம் மற்றும் அனைத்து சமுதாய பிரதிநிதிகள் அடங்கிய கிராம பொதுக்கமிட்டிக்கு அனுமதி வழங்குமாறு மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்தோம். இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. மாவட்ட நிர்வாகமே ஜல்லிக்கட்டு போட்டி நடத்த ஏற்பாடுகள் செய்து வருகிறது. எனவே, அவனியாபுரம் கிராமம் மற்றும் அனைத்து சமுதாய பிரதிநிதிகள் அடங்கிய கிராம பொது கமிட்டியினர் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதிக்குமாறு உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் வீராகதிரவன், அரசு பிளீடர் திலக்குமார் ஆகியோர் ஆஜராகி, ‘‘ஏற்கனவே ஜல்லிக்கட்டு நடத்துவதில் பிரச்னை ஏற்பட்டது. ஐகோர்ட் கிளை உத்தரவுப்படி மாவட்ட நிர்வாகம் நடத்தி வருகிறது. இதற்கு ஆலோசனை வழங்க அனைத்து தரப்பினரையும் கொண்ட கமிட்டியும் உள்ளது. கடந்தாண்டைப் போல இந்த ஆண்டும் மாவட்ட நிர்வாகமே ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தும்’’ என்றனர்.

அப்போது நீதிபதிகள், ஜல்லிக்கட்டு போட்டி என்பது ஐபிஎல் கிரிக்கெட் விளையாட்டு கிடையாது. பல்வேறு பிரச்னைகளுக்கு பின் ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனுமதி பெறப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு போட்டிகளை சில தனிநபர்கள் நடத்தியதால் தான் பல்வேறு பிரச்னைகள் எழுந்தது. எனவே, ஜல்லிக்கட்டு போட்டிகளை அரசு நடத்துவது தான் சிறந்தது. அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழாக்கள் உலகப் புகழ் பெற்றது. இவ்வாறு உள்ள சூழலில் இந்த விழாக்களை தனி நபர்கள் நடத்துவது பொருத்தமாக இருக்காது. எனவே, அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகளை அரசின் சார்பில் மாவட்ட நிர்வாகமே நடத்துவது தான் சரியாக இருக்கும் என உத்தரவிட்டு மனுவை முடித்து வைத்தனர்.

* அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை முதல்வர் தொடங்கி வைக்கிறார்; பாலமேடு ஜல்லிக்கட்டை துவக்கி வைக்கும் துணை முதல்வர்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜன.15ல் மதுரை அவனியாபுரம், ஜன.16ல் பாலமேடு மற்றும் ஜன.17ல் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடக்கின்றன. அலங்காநல்லூர் மற்றும் பாலமேட்டில் வாடிவாசல் அருகே முகூர்த்தகால் நடும் நிகழ்ச்சி வணிகவரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில் நேற்று காலை நடைபெற்றது. அலங்காநல்லூர் கோட்டை முனியசாமி வாடிவாசல் திடல் அருகேயுள்ள முத்தாலம்மன் கோயில் முன்பு முகூர்த்தக்கால் நடப்பட்டது. பின்னர் அமைச்சர் பி.மூர்த்தி, செய்தியாளர்களிடம் கூறியதாவது: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் மு.க.ஸ்டாலினும், பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும் தொடங்கி வைக்கின்றனர். இவ்வாறு அமைச்சர் கூறினார்.

Tags : IPL ,Madurai Jallikattu ,Madurai ,Jallikattu ,High Court ,Murugan ,Avaniyapuram, Madurai ,Madurai High Court ,Madurai… ,
× RELATED பதுக்கல் வியாபாரிகளால் குமரியில்...