விழுப்புரம்: பாமக சார்பில் போட்டியிட இதுவரை 2,045 பேர் விருப்ப மனுக்களை தாக்கல் செய்துள்ளனர் என தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் பேட்டி அளித்துள்ளார். ராமதாஸ் தலைமையிலான பாமகவின் சார்பில் வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்புவதற்கான விருப்ப மனுக்கள் விநியோகம் செய்யும் பணி இன்று விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் தோட்டத்தில் தொடங்கியது. இன்று காலை 10 மணிக்கு பாமகவின் நிறுவனத் தலைவர் ராமதாஸ் விருப்ப மனுக்களை விநியோகம் செய்தார். முதல் மனுவாக செயல் தலைவர் ஸ்ரீகாந்தி தமது விருப்ப மனுவை ராமதாஸிடம் வழங்கினார். இந்த நிலையில், விருப்ப மனு குறித்து பேசிய அவர்,
இதுவரை 2,045 பேர் விருப்ப மனு: ராமதாஸ்
பாமக சார்பில் போட்டியிட நாங்கள் எதிர்பார்க்காத அளவு விருப்ப மனு கொடுத்துள்ளனர். சட்டமன்ற தேர்தலில் எந்தக் கூட்டணியாக இருந்தாலும் 100 இடங்கள் கேட்போம்.
எந்த தலைவரும் என்னை தொடர்புகொள்ளவில்லை: ராமதாஸ்
இதுவரை எந்தக் கட்சித் தலைவர்களும் என்னைத் தொடர்புகொள்ளவில்லை. எடப்பாடி பழனிசாமி மீது எனக்கு வருத்தம் கிடையாது; ஏன் வருத்தப்பட வேண்டும்?. தற்போது கூட்டணி இல்லாமல் தனித்து நிற்க முடியாது; நிச்சயம் கூட்டணி அமைப்போம். பொங்கல் தொகுப்பு மூலம் மக்கள் பயனடைகிறார்கள்; அதைப் பற்றி விமர்சனம் செய்ய வேண்டாம்.
