×

ரூ.25,000 கோடி கச்சா எண்ணெயை அமெரிக்காவுக்கு வெனிசுலா வழங்குகிறது: அமெரிக்க அதிபர் டிரம்ப் பரபரப்பு

வாஷிங்டன்: வெனிசுலா அதிபர் மதுரோ கைது செய்யப்பட்ட நிலையில், அந்நாடு ரூ.25 ஆயிரம் கோடி மதிப்பிலான 3 முதல் 5 கோடி பீப்பாய் கச்சா எண்ணெயை அமெரிக்காவுக்கு தர இருப்பதாகவும் அவை சந்தை விலைக்கு விற்று பணமாக்கப்படும் என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். வெனிசுலா மீது ராணுவ நடவடிக்கை எடுத்து, அந்நாட்டு அதிபர் நிக்கோலஸ் மதுரோவை கைது செய்த அமெரிக்கா, அவரை நாடு கடத்தி உள்ளது. போதைப் பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள மதுரோ, நியூயார்க் நீதிமன்றத்தில் சட்ட விசாரணையை எதிர்கொண்டுள்ளார். இதைத் தொடர்ந்து, வெனிசுலாவின் தற்காலிக அதிபராக டெல்சி ரோட்ரிக்ஸ் பதவியேற்றுள்ள நிலையில், அதிபர் டிரம்ப் நேற்று தனது ட்ரூத் சமூக ஊடக தளத்தில் வெளியிட்ட பதிவு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அந்த பதிவில் அதிபர் டிரம்ப், ‘‘வெனிசுலாவின் இடைக்கால அதிகாரிகள், உயர்தரமான, தடை செய்யப்பட்ட 3 முதல் 5 கோடி பீப்பாய்கள் வரையிலான கச்சா எண்ணெயை அமெரிக்காவிற்கு வழங்கப் போவதாக அறிவிப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த எண்ணெய் அதன் சந்தை விலையில் விற்கப்படும். இதன் மூலம் கிடைக்கும் பணத்தை அமெரிக்காவின் அதிபர் என்ற முறையில் என் கட்டுப்பாட்டில் இருக்கும். அந்தப் பணம் வெனிசுலா மற்றும் அமெரிக்க மக்களின் நலனுக்காகப் பயன்படுத்தப்படுவதை நான் உறுதி செய்வேன்’’ என கூறி உள்ளார்.

வெனிசுலா மீது பொருளாதார தடைகள் இருப்பதால் அதன் எண்ணெயை சந்தை விலைக்கு விற்க முடியாது. ஆனால் இந்த எண்ணெயை வாங்கி அமெரிக்கா விற்பதால் அதை சந்தை விலைக்கு விற்று பணமாக்குவதாக டிரம்ப் கூறி உள்ளார். ஏற்கனவே, மதுரோ கைது செய்யப்பட்ட போது, அமெரிக்க எண்ணெய் நிறுவனங்கள் வெனிசுலாவில் பெரும் அளவில் முதலீடு செய்து அதன் எண்ணெய் வளத்தை பயன்படுத்தி மேம்படுத்தும் என அறிவித்தார். இது தொடர்பாக எண்ணெய் நிறுவனங்களின் நிர்வாகிகளுடன் வெள்ளை மாளிகை வரும் வெள்ளிக்கிழமை ஆலோசனை கூட்டமும் நடக்க இருக்கிறது.

* டிரம்ப் மிரட்டலுக்கு ரோட்ரிக்ஸ் பதிலடி
தற்காலிக அதிபரான ரோட்ரிக்ஸ் சரியானதை செய்யாவிட்டால், வெனிசுலாவை அமெரிக்க நலன்களுடன் ஒத்துப் போகும் நாடாக மாற்றாவிட்டால், மதுரோவைவிட மோசமான விளைவுகளை சந்திப்பார் என அதிபர் டிரம்ப் மிரட்டல் விடுத்திருந்தார். இதற்கிடையே நேற்று அரசாங்க விவசாய மற்றும் தொழில்துறை அதிகாரிகளுக்கு மத்தியில் உரையாற்றிய ரோட்ரிக்ஸ், ‘‘தனிப்பட்ட முறையில் என்னை அச்சுறுத்துபவர்களுக்கு ஒன்றை கூறிக் கொள்கிறேன். என் விதியை அவர்கள் தீர்மானிக்கவில்லை. கடவுள்தான் தீர்மானிக்கிறார். இனி வெனிசுலா அதன் சொந்த கொள்கைகளின்படி செயல்படும்’’ என கூறி உள்ளார்.

* 24 ராணுவ வீரர்கள் பலி
கடந்த 3ம் தேதி அமெரிக்கா நடத்திய தாக்குதலில் 24 வெனிசுலா பாதுகாப்பு படை வீரர்கள் பலியாகி இருப்பதாக அந்நாட்டு ராணுவம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த தாக்குதலில் வெனிசுலாவில் பணிபுரியும் 32 கியூபா ராணுவ வீரர்கள், காவல்துறை அதிகாரிகள் பலியானதாக அறிவிக்கப்பட்டது. அமெரிக்கா தரப்பில் 5 வீரர்கள் காயமடைந்துள்ளனர். அதில் 3 பேர் பணிக்கு திரும்பி விட்டதாகவும் 2 பேர் மட்டும் சிகிச்சை பெறுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

Tags : Venezuela ,US ,President Trump ,Washington ,President ,Maduro ,
× RELATED அமெரிக்காவில் நுழைய 7 நாடுகளுக்கு தடை: டிரம்ப் அதிரடி உத்தரவால் அதிர்ச்சி