×

68 ஹெலிகாப்டர்கள் இறக்குமதியில் தாமதம்; புதிய வரி விதிப்பால் என் மீது மோடிக்கு கோபம்: அமெரிக்க அதிபர் டிரம்ப் பகீர் தகவல்

வாஷிங்டன்: இந்தியப் பொருட்கள் மீதான வரி உயர்வால் பிரதமர் மோடி அதிருப்தியில் இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை எதிர்த்து, இந்தியப் பொருட்கள் மீது அமெரிக்க அரசு 50 சதவீதம் கூடுதல் வரியை விதித்தது. இதில் 25 சதவீதம் பரஸ்பர வரியாகவும், மீதமுள்ள 25 சதவீதம் அபராத வரியாகவும் கணக்கிடப்படுகிறது.

இந்நிலையில் வாஷிங்டனில் நேற்று நடைபெற்ற குடியரசுக் கட்சி கூட்டத்தில் பேசிய அதிபர் டிரம்ப்,
‘எங்களுடைய புதிய வரி விதிப்பு நடவடிக்கையால் இந்திய பிரதமர் மோடிக்கு, என் மீது மகிழ்ச்சி இல்லை. அவர் கோபத்தில் இருக்கிறார். ரஷ்யா – உக்ரைன் போருக்கு நிதியளிக்கும் வகையில் இந்தியா எண்ணெய் வாங்குவதாக நாங்கள் கருதினோம். ஆனால் எங்களின் அழுத்தத்தால் இந்தியா தற்போது ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதை கணிசமாக குறைத்துள்ளது. மோடி மிகச் சிறந்த மனிதர், அவருடன் எனக்கு நல்ல நட்பு உள்ளது’ என்று வெளிப்படையாகப் பேசினார்.

மேலும் பாதுகாப்புத் துறை ஒப்பந்தம் குறித்தும் பேசிய அவர், ‘68 அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் வழங்குவதில் 5 ஆண்டுகள் தாமதம் உள்ளதாக மோடி என்னிடம் கூறினார். அதை உடனடியாக சரிசெய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்’ என்று தெரிவித்தார். இதனிடையே அமெரிக்காவின் இந்த 50 சதவீத வரி விதிப்பால் ஜவுளி, மருந்து மற்றும் நகை ஏற்றுமதி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் ஏற்றுமதி 86.5 பில்லியன் டாலரிலிருந்து 50 பில்லியன் டாலராக குறைய வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், ‘140 கோடி மக்களின் நலன் மற்றும் பாதுகாப்பைக் கருதியே ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குகிறோம், அமெரிக்காவின் இந்த வரி விதிப்பு நியாயமற்றது மற்றும் காரணமற்றது’ என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Modi ,US ,President Trump ,Washington ,President Donald Trump ,US government ,Russia.… ,
× RELATED ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கினால் 500 சதவீத...