- பகீர் டர்ன்ஸ்
- அம்பர்நாத் நகராட்சி தேர்தல்
- பாஜக
- மகாராஷ்டிரா
- ஷிண்டே சிவசேனா
- மும்பை
- Sivasena
- காங்கிரஸ்
- அம்பர்நாத் நகராட்சி
மும்பை: மகாராஷ்டிராவில் ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாஜக, எதிரணியான காங்கிரசுடன் கைகோர்த்து கூட்டணி கட்சியான சிவசேனாவை வீழ்த்திய சம்பவம் அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் அம்பர்நாத் நகராட்சிக்கு கடந்த டிசம்பர் மாதம் தேர்தல் நடைபெற்றது. இதில் கட்சிகள் தனித்தனியாக போட்டியிட்ட நிலையில், மொத்தம் உள்ள 60 வார்டுகளில் துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா 27 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. எனினும் பெரும்பான்மைக்கு இன்னும் 4 இடங்கள் தேவைப்பட்டன.
இந்நிலையில் யாரும் எதிர்பாராத திருப்பமாக, சிவசேனாவை ஆட்சிக்கு வரவிடாமல் தடுப்பதற்காக பாஜக, காங்கிரஸ் மற்றும் அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்து ‘அம்பர்நாத் விகாஸ் அகாடி’ என்ற புதிய உள்ளூர் கூட்டணியை உருவாக்கின. இந்த புதிய கூட்டணியில் பாஜக 14, காங்கிரஸ் 12, தேசியவாத காங்கிரஸ் 4 மற்றும் 2 சுயேட்சைகள் என மொத்தம் 32 உறுப்பினர்கள் ஆதரவு திரட்டப்பட்டு பெரும்பான்மை நிரூபிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக நேற்று நடைபெற்ற நகராட்சித் தலைவர் தேர்தலில், இந்த புதிய கூட்டணியின் சார்பில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் தேஜ கரஞ்சுலே பாட்டீல், சிவசேனா வேட்பாளர் மனிஷா வலேகரை விட 6 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றார்.
மாநில மற்றும் தேசிய அளவில் சிவசேனாவுடன் (ஏக்நாத் ஷிண்டே) கூட்டணியில் உள்ள பாஜக, உள்ளாட்சித் தேர்தலில் எதிரியான காங்கிரசுடன் கூட்டணி அமைத்தது குறித்து அக்கட்சியினர் கூறுகையில், ‘நீண்ட காலமாக நடைபெறும் ஊழல் மற்றும் மிரட்டல் கலாசாரத்தை முடிவுக்கு கொண்டுவரவே இந்த கூட்டணி அமைக்கப்பட்டது’ என்றனர். இதை விமர்சித்துள்ள சிவசேனா தலைவர்கள், ‘பாஜகவின் இந்த செயல் நெறிமுறையற்றது மற்றும் சந்தர்ப்பவாத அரசியலாகும்’ என்று சாடியுள்ளனர். மும்பை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஷிண்டேவின் கோட்டையாக கருதப்படும் அம்பர்நாத் நகராட்சியில் ஏற்பட்டுள்ள இந்தத் தோல்வி ஆளும் மகாயுதி கூட்டணியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
