×

ஏழு ஆண்டு திருமண வாழ்க்கை முறிவு; ஹாலிவுட் காமெடி நடிகை விவாகரத்து: பரஸ்பரம் பேசி தீர்த்துக் கொள்ள முடிவு

நியூயார்க்: பிரபல ஹாலிவுட் நகைச்சுவை நடிகை ஏமி ஷூமர் தனது கணவரை அதிகாரப்பூர்வமாக விவாகரத்து செய்ய நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல ஹாலிவுட் நகைச்சுவை நடிகை ஏமி ஷூமர், கடந்த 2018ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சமையல் கலைஞர் கிரிஸ் ஃபிஷர் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்தத் தம்பதியினருக்கு ஜீன் என்ற 6 வயது மகன் உள்ள நிலையில், கடந்த சில மாதங்களாக இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வந்தது.

இதுகுறித்து கடந்த டிசம்பர் 12ம் தேதி தாங்கள் பிரிய உள்ளதாக இருவரும் அறிவித்திருந்தனர். தனது உடல் எடை குறைவு அல்லது கணவரின் ஆட்டிசம் குறைபாடு ஆகியவை பிரிவுக்கு காரணமல்ல என்று வதந்திகளுக்கு ஏமி ஷூமர் ஏற்கனவே முற்றுப்புள்ளி வைத்திருந்தார். இந்நிலையில் நியூயார்க் நீதிமன்றத்தில் நேற்று ஏமி ஷூமர் விவாகரத்து கோரி அதிகாரப்பூர்வமாக மனு தாக்கல் செய்துள்ளார். இது கணவன் – மனைவி இருவரும் பரஸ்பர சம்மதத்துடன் தாக்கல் செய்துள்ள மனுவாகும். சொத்து மற்றும் குழந்தை வளர்ப்பு தொடர்பான நிபந்தனைகள் ஏற்கனவே பேசி முடிக்கப்பட்டுவிட்டன.

இதுகுறித்து நெருங்கிய வட்டாரங்கள் கூறுகையில், ‘மகனின் எதிர்காலம் மற்றும் நலன் கருதி இருவரும் நட்புடன் குழந்தையை வளர்க்க முடிவு செய்துள்ளனர்’ என்று தெரிவித்தனர். முன்னதாக ஏமி ஷூமர் வெளியிட்ட சமூக வலைதள பதிவில், ‘எந்த வருத்தமும் இல்லை, இது சுய கவனிப்பு மற்றும் சுய அன்பிற்கான ஆண்டு’ என்று குறிப்பிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags : New York ,Hollywood ,Amy Schumer ,United States ,
× RELATED அமெரிக்காவில் நுழைய 7 நாடுகளுக்கு தடை: டிரம்ப் அதிரடி உத்தரவால் அதிர்ச்சி