×

ஜேஎன்யுவில் நடந்த போராட்டத்தில் மோடி, அமித்ஷாவுக்கு எதிராக மாணவர்கள் கண்டன கோஷம்: வழக்குப்பதிவு செய்ய பல்கலை. சார்பில் போலீசுக்கு கோரிக்கை

புதுடெல்லி: ஐவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடந்த போராட்டத்தில் மோடி, அமித்ஷாவுக்கு எதிராக மாணவர்கள் கண்டன கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ள நிலையில் வழக்குப்பதிவு செய்ய கோரி பல்கலைக்கழக நிர்வாகம் காவல்துறைக்கு கடிதம் எழுதியுள்ளது. டெல்லியில் கடந்த 2020ம் ஆண்டு ஒன்றிய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடந்த போராட்டத்தின்போது பெரிய அளவில் கலவரம் வெடித்தது.

இதில் 2 போலீசார் உள்பட 53 பேர் கொல்லப்பட்டனர். 700க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்த கலவரத்தின் போது மர்ம கும்பல் ஒன்று ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்துக்குள் (ஜேஎன்யு) புகுந்து வன்முறையில் ஈடுபட்டது. இதில் அப்போதைய ஜேஎன்யு மாணவர் சங்கத் தலைவர் ஆயிஷி கோஷ் உட்பட 28 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தை கண்டிக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 5ம் தேதி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் போராட்டம் நடத்தப்படுவது வழக்கம்.

அந்த வகையில் நேற்று முன்தினம் இரவு பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்கள் ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, 2020 கலவர வழக்கில் உமர் காலித், ஷர்ஜீல் இமாம் ஆகிய இருவருக்கும் ஜாமீன் மறுக்கப்பட்டது தொடர்பாக பிரதமர் மோடி மற்றும் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு எதிராக மாணவர்கள் கண்டன கோஷங்களை எழுப்பினர். இது, அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும், பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சருக்கு எதிராக மாணவர்கள் கோஷம் எழுப்பியது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யக் கோரி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக நிர்வாகம் டெல்லி காவல்துறைக்கு கடிதம் எழுதியுள்ளது.

அதில், ‘2020 ஜனவரி 5ல் பல்கலைக்கழகத்தில் நடந்த சம்பவத்தை நினைவுகூரும் வகையில் மட்டுமே கூட்டம் நடத்தப்பட்டது. ஆனால் உமர் காலித் மற்றும் ஷர்ஜீல் இமாம் ஆகியோரின் ஜாமீன் மனுக்கள் மீதான நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து நிகழ்வின் தன்மை மாறியது. சில மாணவர்கள் மிகவும் ஆட்சேபனைக்குரிய, ஆத்திரமூட்டும் மற்றும் எரிச்சலூட்டும் கோஷங்களை எழுப்பினர்.

இதன் மூலம் அவர்கள் உச்ச நீதிமன்றத்தை நேரடியாக அவமதித்தனர். மேலும், இந்த கோஷங்கள் பல்கலைக்கழக நடத்தை விதிகளை நேரடியாக மீறுவதாகும். ஜேஎன்யு மாணவர் சங்கத் தலைவர் அதிதி மிஸ்ரா உட்பட பல மாணவர்களுக்கு இதில் தொடர்பு உள்ளது. இது சம்பவத்தில் தொடர்புடைய சட்டங்களின் கீழ் வழக்குப் பதிவு செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறது,’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

* பாம்புகள் நசுக்கப்படுகின்றன பாம்பு குட்டிகள் அலறுகின்றன
டெல்லி சட்டத்துறை அமைச்சர் கபில் மிஸ்ரா கூறுகையில், ‘‘பாம்புகள் நசுக்கப்படுகின்றன, அதைப் பார்த்து பாம்பு குட்டிகள் அலறுகின்றன. குற்றவாளிகள், நக்சலைட்டுகள், தீவரவாதிகளுக்கு ஆதரவாக கோஷமிடுபவர்கள், அவர்களின் தீய திட்டங்கள் ஒவ்வொன்றாக தகர்க்கப்படுவதால் விரக்தி அடைந்துள்ளனர். இதுபோல குற்றவாளிகளை ஆதரிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

Tags : MODI ,AMITSHAH ,JNU SLOGAN ,UNIVERSITY ,NEW DELHI ,IVAKARLAL NERU UNIVERSITY ,
× RELATED பிப்ரவரி 1ம் தேதியான...