×

மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

செய்துங்கநல்லூர், ஜன. 7: செய்துங்கநல்லூரில் 100 நாள் வேலை திட்ட பெயர் மாற்றம் கண்டித்து மாற்றுத்திறனாளிகள் புதிய சட்ட மசோதா நகலை கிழித்து எரியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் பெயரை ஒன்றிய அரசு மாற்றியதை கண்டித்து புதிய சட்ட மசோதா நகலை கிழித்து எரியும் போராட்டம், தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் செய்துங்கநல்லூர் யூனியன் அலுவலகத்தில் நடந்தது. கருங்குளம் ஒன்றிய தலைவர் மந்திரம் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் கண்ணன் பங்கேற்று பேசுகையில்,

ஒன்றிய அரசு கூட்டணி அமைத்து வரும் கட்சிகள் நம்மிடையே வாக்குகள் கேட்டு வரும்போது சொன்னதை செய்தீர்களா என்று கேள்விகள் எழுப்ப வேண்டும். 100 நாள் வேலை திட்டத்திற்கு எதிராக இயற்றப்பட்ட சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்த வேண்டும். 125 நாள் வேலை கொடுக்கப்படும் என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று வாக்கு கேட்க வருபவர்களிடம் கேள்வி கேட்க வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்திற்கு மாற்றாக இயற்றப்பட்ட சட்டத்திற்கு கண்டனம் தெரிவிக்கிறோம். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், ஒன்றிய அரசை சார்ந்தது. சமீபகாலமாக ஒன்றிய அரசு 100 நாள் வேலை திட்டத்தை ஒழிக்கும் விதமாக ஒன்றிய அரசுக்கு 60% மற்றும் மாநில அரசு 40% பங்களிப்பு உள்ளது என சொல்வது வேடிக்கையாக உள்ளது. தமிழக அரசுக்கு ஒதுக்க வேண்டிய நிதியை முறையாக ஒதுக்காமல் தமிழக அரசு மீது பல்வேறு நிதிச்சுமையை ஏற்படுத்தி தமிழக அரசு மீது கலங்கங்களை ஏற்படுத்தி திசை திருப்பும் விதமாக ஒன்றிய அரசு செயல்படுகிறது, என்றார். போராட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர், பொதுமக்கள் உள்பட 150க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : Serdhunganallur ,Union government ,
× RELATED கூரை வீட்டில் திடீர் தீ