நாகர்கோவில், ஜன.6 : நாகர்கோவில் இடலாக்குடி அருகே உள்ள குளத்தூர் பகுதியில் வசித்து வருபவர் சலிம் (68). சமையல் மாஸ்டர். இவரது மனைவி பாத்திமா (53). இவரும் சமையல் வேலைக்கு செல்வது வழக்கம்.
நேற்று காலை சலிம் மற்றும் அவரது மனைவி பாத்திமா ஆகியோர் வீட்டை பூட்டி விட்டு, அந்த பகுதியில் நடந்த விசேஷ நிகழ்ச்சிக்கு சமையல் பணிக்காக சென்று விட்டனர்.
இந்த நிலையில் காலை 10 மணியளவில் திடீரென வீட்டில் இருந்து புகை வந்தது. சிறிது நேரத்தில் புகை அதிகரித்து தீ பிடித்து எரிந்தது. இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
நாகர்கோவிலில் இருந்து தீயணைப்பு துறையினர் சென்று கதவை உடைத்து தீயை அணைத்தனர். அதற்குள் வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து சாம்பல் ஆனது. வீட்டில் தீ பிடித்து எரிந்த தகவல் அறிந்ததும் சலிம் மற்றும் அவரது மனைவி பாத்திமா ஆகியோர் பதறி அடித்து ஓடி வந்தனர்.
