×

மகளை கர்ப்பமாக்கிய கொடூர தந்தைக்கு தூக்கு; நெல்லை போக்சோ நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

 

​நெல்லை: நெல்லை அருகே 15 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய தந்தைக்கு, தூக்கு தண்டனை விதித்து நெல்லை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. நெல்லை மாவட்டம், வள்ளியூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்தவர் 43 வயதான உடை மரம் வெட்டும் தொழிலாளி. இவருக்கு 2 மனைவிகள். முதல் மனைவிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். முதல் மனைவியை பிரிந்து 2வது மனைவியுடன் குடும்பம் நடத்தி வந்த தொழிலாளிக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இதில், மூத்த மகளுக்கு திருமணம் ஆகிவிட்டது. 2வது மகளுக்கு 15 வயது ஆகிறது. இவர் 8ம் வகுப்போடு படிப்பை தொடராமல் நிறுத்தி விட்டார். தினசரி காலையில் அவரது தாய் அருகில் உள்ள தோட்டத்தில் வேலைக்குச் சென்று விடுவார்.
இதனால் சிறுமி சமைப்பது உள்பட வீட்டு வேலைகளை செய்வது வழக்கம். அவரது தந்தை மரம் வெட்டச் சென்று விட்டு மதியம் சாப்பிட வீட்டிற்கு வருவார்.

இந்நிலையில், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 5ம் தேதி உடல்நிலை மோசமான சிறுமியை, அவரது தாயார் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கிருந்து உடனடியாக சிறுமி நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் 5 மாத கர்ப்பிணியாக இருப்பதை கண்டறிந்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த மருத்துவக்குழு சம்பந்தப்பட்ட வள்ளியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து அப்போதைய வள்ளியூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்தனர். அதில், கடந்த 2024 ஆகஸ்ட் 27ம் தேதி சிறுமியின் தாயார் கோயிலுக்கு சென்ற போது, தனியாக இருந்த சிறுமியை அவரது தந்தையே பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது.

மேலும், இந்த சம்பவத்தை வெளியே கூறக்கூடாது என மகளுக்கு கொலை மிரட்டல் விடுத்ததும், தொடர்ந்து பலமுறை பாலியல் வன்முறையில் தந்தையே ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சிறுமியின் தந்தையை கைது செய்து பாளை. மத்திய சிறையில் அடைத்தனர். சிறுமியின் கருவில் உருவான சிசுவின் டிஎன்ஏ மாதிரியும், தந்தையின் டிஎன்ஏ மாதிரியும் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டது. அந்த மாதிரிகள் 7 மாத ஆய்வுக்குப் பின்னர் கடந்த ஆண்டு அக்டோபர் 10ம் தேதி வெளியானது. அதில் சிறுமியின் கர்ப்பத்திற்கு அவரது தந்தைதான் காரணம் என உறுதியானது. சிறுமியின் உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டு இருந்ததால், டாக்டர்களின் பரிந்துரையின் அடிப்படையில் கருக்கலைப்பு செய்யப்பட்டது.

இந்த வழக்கு நெல்லை சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த 11 மாதங்களாக நடந்து வந்த நிலையில், நேற்று நீதிபதி சுரேஷ்குமார் 66 பக்க தீர்ப்பை வழங்கினார். தீர்ப்பை வாசித்த நீதிபதி சுரேஷ்குமார், ‘‘இந்த வழக்கில் நீதிமன்றம் குறைந்தபட்ச தண்டனை வழங்க நினைத்தாலும், மனைவியும், பாதிக்கப்பட்ட குழந்தையும் உச்சபட்ச தண்டனை கொடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்கள். சொந்த மகளை ஒரு தந்தையே பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததை ஏற்க முடியாது. அதனால் அவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும், குற்றவாளியான சிறுமியின் தந்தைக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது’’ என தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் உஷா ஆஜரானார். இந்த வழக்கில் விரைந்து ஆவணங்களை சமர்ப்பித்து சிறப்பாக செயல்பட்ட போலீசாரை எஸ்பி பிரசன்னகுமார் பாராட்டினார்.

 

Tags : rice ,Boxo court ,Nella ,Poxo Special Court ,Nella District ,Valliyur All Women's Police Station ,
× RELATED 15 கிலோ கஞ்சா பறிமுதல் – இருவர் கைது