×

திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம் மேல்முறையீட்டு வழக்கில் ஐகோர்ட் கிளை இன்று தீர்ப்பு

 

மதுரை: திருப்பரங்குன்றம் மலையில் தர்கா அருகே தீபம் ஏற்றுவது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் ஐகோர்ட் மதுரை கிளை அமர்வு இன்று தீர்ப்பளிக்கிறது. மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் மலை தூணில் தீபம் ஏற்றக் கோரி ராம.ரவிக்குமார் என்பவர் தொடர்ந்த வழக்கில் தீபம் ஏற்ற ஐகோர்ட் மதுரை கிளை தனி நீதிபதி சுவாமிநாதன் டிச. 1ம் தேதி உத்தரவிட்டார். இதை எதிர்த்து தமிழ்நாடு அரசு தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை ஐகோர்ட் கிளை நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே.கே. ராமகிருஷ்ணன் ஆகியோர் முன் நடைபெற்றது. டிச. 18ம் தேதி அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், மேல்முறையீட்டு மனுவின் மீது தீர்ப்பளிப்பதாகக்கூறி நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

இதனிடையே, திருப்பரங்குன்றம் மலையில் கந்தூரி விழா நடத்த தடை விதிக்கக்கோரி மாணிக்கமூர்த்தி என்பவர் ஐகோர்ட் மதுரை கிளையில் கடந்த 2ம் தேதி மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி எஸ்.மதி, தர்கா தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டார். மேலும், கந்தூரி விழா நடத்தக்கூடாது எனவும், சந்தனக்கூடு நிகழ்வில் 50 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில், ஐகோர்ட் மதுரை கிளையில் நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் ஆகியோர் நேற்று காலை வழக்கமான வழக்குகளை விசாரித்தனர்.

அப்போது, திருப்பரங்குன்றம் தர்காவில் கந்தூரி விழா நடத்தக் கூடாது, 50 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டுமென்ற தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்யக் கோரி தர்கா தரப்பில் மேல்முறையீட்டு மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென வழக்கறிஞர் பிரபு ராஜதுரை ஆஜராகி முறையிட்டார். அதற்கு நீதிபதிகள், ‘‘திருப்பரங்குன்றம் தீப விவகாரம் தொடர்பான மேல்முறையீட்டு மனுவின் மீது நாளை (இன்று) தீர்ப்பளிக்கப்படுகிறது. அதில் முறையீடு செய்யப்பட்டுள்ள விவகாரமும் இருப்பதால் அவசர வழக்காக விசாரிக்க வேண்டியதில்லை. தீர்ப்பில் உள்ளதை அறிந்து கொண்ட பின்னர் தேவைப்பட்டால் முறையீடு செய்யலாம்’’ என கூறியுள்ளனர்.

 

Tags : High Court ,Madurai ,Thiruparankundram hill ,
× RELATED அறிவுப் புரட்சிக்கு நாம்...