×

இது ஒரு திட்டம் அல்ல, சமத்துவத்தின் அடுத்த சின்னம்: மயில்சாமி அண்ணாதுரை

 

சென்னையில் 10 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சியில் ஓய்வுபெற்ற இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பேசியதாவது: உலகம் உங்கள் கையில். சிறு மடிக்கணினி அந்த மாற்றத்தை செய்துவிடுமா? தனி மனிதனாக எனக்கு செய்திருக்கிறது. இன்றைய நிகழ்வை சரியாக எடுத்துக்கொண்டால் மாணவர்களாகிய உங்களுக்கும் அது நிகழும். சாதாரண கிராமப் பள்ளியில் நடித்திருந்த நான், 1980ல் உங்களை போல ஒரு கல்லூரி மாணவன். முதல்முறையாக எங்கள் கல்லூரிக்கு வந்த கம்ப்யூட்டர் ஏசி அறையில் கண்ணாடி அறைக்குள் இருப்பதை பார்த்து வியந்தேன். அதன்பிறகு கம்ப்யூட்டரில் பல வியத்தகு சாதனைகளை செய்துள்ளேன். இதெல்லாம் என்னை இந்திய விண்வெளி ஆய்வு களத்தில் சேர்த்தன. அதன்பிறகு செயற்கைக்கோள் செயல்பாட்டுக்கான மேலாக தேர்வானேன். அப்படியே 9 செயற்கைக்கோள் செயல்திட்ட இயக்குநர் ஆனேன். இதனால் சந்திராயன் திட்ட இயக்குனர் ஆனேன். மங்கள்யான் முதல் முயற்சியிலேயே வெற்றிபெற கணினிகள் மிகவும் உதவின.

விண்வெளி துறையில் எனது பணியும் உச்சக்கட்டத்தில் ஒரே சமயத்தில் 20, 25 திட்டங்களை கண்காணிக்க கணினிகள் உதவின. பணிநிறைவுக்கு பிறகு கடந்த 6 ஆண்டுகளில் முன் இருப்பதைவிட பல துறைகளில் உதாரணமாக, டிரோன்கள், பசுமை எரிசக்தி, மருத்துவ துறையில் ரோபாட்டிக் சர்ஜரி பல அறிவியல் தொழில்நுட்பங்களில் பங்கேற்றுள்ளேன். அதையும் தாண்டி தேசிய மற்றும் சர்வதேச அளவிலான அறிவியல் கழக தொழில்நுட்ப மருத்துவ கருத்தரங்குகளில் பங்கேற்று பேசுகிறேன். இதற்கு உற்ற துணையாக விளங்குவது என்னிடம் உள்ள மடிக்கணினியும், அதில் உள்ள ஏஐ தொழில்நுட்பமும்தான். சாதி, மதம், செல்வம் எதுவும் கல்விக்கு தடை இல்லை என்று இன்னும் நம்மால் சொல்ல முடிகிறது.

ஆனால் மாறி வரும் கல்விச்சூழல் பள்ளி, கல்லூரி என்ற நான்கு சுவற்றுக்குள் அடங்கி விடுவதில்லை. தினம் தினம் தன்னை புதுப்பித்துக் கொள்ள வேண்டிய சூழலில் மனித சமுதாயம் தள்ளப்பட்டுள்ளது. நித்தம் கல்வி, லைப்லாங் கல்வி என்று நம்முள் விரியும் டிஜிட்டல் உலகிற்கு இனி தடையில்லை என்பதை மெய்ப்படுத்த தான் உலகம் உங்கள் கையில். மடிக்கணினி என்பது பார்க்கும் கருவி அல்ல, உருவாக்கும் கருவி. அதில் செயலிகளை உருவாக்கலாம், வடிவமைப்புகளை செய்யலாம், ஆராய்ச்சிகளை நடத்தலாம். ஏஐ தொழில்நுட்பம் மூலம் தமிழ்நாடு இன்னும் அடுத்தகட்டத்தை அடையும். இது ஒரு திட்டம் அல்ல, சமத்துவத்தின் அடுத்த சின்னம். இவ்வாறு அவர் பேசினார்.

 

Tags : Mayilsamy Annadurai ,Chennai ,ISRO ,
× RELATED வெளியுறவு கொள்கையிலும் ஒன்றிய பாஜக...