×

ஒன்றியத்திலும், மாநிலத்திலும் கூட்டணி ஆட்சி; உள்ளாட்சி தேர்தலில் மட்டும் மோதல் ஏன்?.. துணை முதல்வர் அஜித் பவார் விளக்கம்

 

புனே: ஒன்றியத்திலும், மாநிலத்திலும் கூட்டணியாகச் செயல்படும் கட்சிகள் உள்ளாட்சித் தேர்தலில் தனித்தனியாகப் போட்டியிடுவது ஏன் என்பது குறித்து மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் விளக்கம் அளித்துள்ளார். மகாராஷ்டிராவில் பாஜக, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா மற்றும் அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்து கூட்டணி ஆட்சி நடத்தி வருகின்றன. புனே மற்றும் பிம்ப்ரி-சிஞ்ச்வாட் மாநகராட்சித் தேர்தல்கள் நெருங்கி வரும் நிலையில், ஆளுங்கட்சியில் இடம்பெற்றுள்ள கூட்டணி கட்சிகள் தனித்தனியாகக் களமிறங்குவது வாக்காளர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு முன்பு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் போதும், மாநிலத்தில் விலாஸ்ராவ் தேஷ்முக், அசோக் சவான் போன்றோர் முதல்வராக இருந்தபோதும் உள்ளாட்சித் தேர்தல்கள் உள்ளூர் பிரச்னைகளை முன்வைத்துத் தனித்தனியாகவே எதிர்கொள்ளப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து புனேவில் செய்தியாளர்களிடம் பேசிய துணை முதல்வர் அஜித் பவார், ‘எனது 35 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் எத்தனையோ தேர்தல்களைச் சந்தித்துள்ளேன். ஆனால் இம்முறை தேர்தல் களம் சற்று விசித்திரமாக உள்ளது.

ஒன்றியத்தில் பிரதமர் மோடி தலைமையிலான அரசிலும், மாநிலத்தில் பட்னாவிஸ், ஷிண்டே ஆகியோருடன் இணைந்தும் நாங்கள் ஒன்றாகச் செயல்படுகிறோம். ஆனால் புனே உள்ளாட்சியில் நிலைமை வேறாக உள்ளதால், ஏன் இந்த முரண்பாடு எனப் புத்திசாலி வாக்காளர்கள் சிந்திக்கக்கூடும். ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் வளர்ச்சிப் பணிகளுக்குப் போதிய நிதியைத் தாராளமாக வழங்கி வருகின்றன. ஆனால், கடந்த பல ஆண்டுகளாக ஒரே தலைமையின் கீழ் இருந்த மாநகராட்சிகளின் நிலை என்ன? என்பதுதான் தற்போதைய கேள்வி. இதில் ஒன்றிய அல்லது மாநில அரசுகளின் மீது எந்தத் தவறும் இல்லை; உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாகச் செயல்பாடுதான் கேள்விக்குறியாக உள்ளது’ என்று தெரிவித்துள்ளார்.

Tags : Deputy Principal ,Ajit Bawar ,Pune ,Maharashtra ,Deputy ,Union ,Shiv Sena ,BJP ,Eknath Shinde ,
× RELATED போதை பொருள் எப்ஐஆரை ரத்து...